Sunday, June 18, 2017

மொபைல் எண் மாற்றம் எதிர்த்த வழக்கு தள்ளுபடி

பதிவு செய்த நாள்18ஜூன்2017 01:52

சென்னை:வாடிக்கையாளரின் ஒப்புதல் இல்லாமல், வேறு நபருக்கு மொபைல் போன் எண்ணை மாற்றிய, ஏர்டெல் நிறுவனத்துக்கு எதிரான வழக்கை, சென்னை சிவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர், வி.எஸ்.சுரேஷ். இவரது மொபைல் போனில், தேவையற்ற குறுஞ்செய்திகள் வந்ததால், ஏர்டெல் நிறுவனத்துக்கு எதிராக, போலீசில் புகார் கொடுத்தார். எழும்பூர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார். புகாரை பதிவு செய்த போலீசார், விசாரணைக்காக, 'சிம்' கார்டு மற்றும் மொபைல் போனை பெற்றுச் சென்றனர். பின், நீதிமன்றத்தில், அவற்றை ஒப்படைத்தனர்.

இந்நிலையில், மொபைல் போன் எண்ணை வேறு நபருக்கு, ஏர்டெல் நிறுவனம் மாற்றியது. அதனால், தன்னிடம் ஒப்புதல் பெறாமல், வேறு நபருக்கு எண்ணை மாற்றியதால், ஏர்டெல் நிறுவனத்துக்கு எதிராக, சுரேஷ் வழக்கு தொடுத்தார்.

ஏர்டெல் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'ப்ரீபெய்டு திட்டத்தின் கீழ், இணைப்பு பெற்றுள்ளார். தொடர்ந்து, 90 நாட்கள், 'சிம்' கார்டு பயன்படுத்தவில்லை என்றால், சேவை துண்டிக்கப்பட்டு விடும். பின், அந்த எண் வேறு வாடிக்கையாளருக்கு ஒதுக்கப்படும். இதில், விதிமீறல் எதுவும் இல்லை' என, கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த, நீதிபதி ஜெயமங்களம், 'வேறு வாடிக்கையாளருக்கு, எண் ஒதுக்கப்பட்ட பின், நீதிமன்றத்தை அணுகி உள்ளார். போலீசிடம், மொபைல் போனை ஒப்படைத்ததற்கான ஆதாரங்களை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. வழக்கை நிரூபிக்க, மனுதாரர் தவறி விட்டார். எனவே, தள்ளுபடி செய்யப்படுகிறது' என, உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.12.2024