Saturday, June 10, 2017

சேலம் விமான நிலைய விரிவாக்கம் ஒரு அடி நிலத்தை கூட கொடுக்க மாட்டோம் : பேச்சுவார்த்தையில் விவசாயிகள் திட்டவட்டம்

2017-06-10@ 01:25:18




ஓமலூர் : சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்காக, ஒரு அடி நிலத்தை கூட கொடுக்க மாட்டோம் என்று, ஓமலூரில் அதிகாரிகள் தலைமையில் நடந்த கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரத்தில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு, சுமார் 150 ஏக்கரில் விமான நிலையம் கட்டப்பட்டது. குறுகிய காலம் மட்டுமே விமான போக்குவரத்து நடந்த நிலையில், போதிய வருவாய் இல்லாததால் விமான சேவை நிறுத்தப்பட்டது. தற்போது, இந்த விமான நிலையத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய 570 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிடப்பட்டு, சேலம் கலெக்டர் சம்பத் மற்றும் அதிகாரிகள், காடையாம்பட்டி அருகே தும்பிப்பாடி கிராமத்தில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ள இடத்தை கடந்த வாரம் பார்வையிட்டனர்.

அப்போது கிராம மக்கள், கலெக்டரை முற்றுகையிட்டு, விவசாய நிலங்களை எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே கையகப்படுத்திய நிலத்துக்கு போதிய தொகை வழங்கவில்லை என்றும், நிலத்தின் உரிமையாளர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதாக கூறிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் புகார் ெதரிவித்தனர். இந்நிலையில் நேற்று, ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டத்தில் பேசிய ஓமலூர் தாசில்தார் ராஜேந்திரன், காடையாம்பட்டி தாசில்தார் ராஜேஷ்குமார் ஆகியோர், விவசாயிகளிடம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கொடுப்போருக்கு, கூடுதல் தொகை வழங்கப்படும் என தெரிவித்தனர்.

ஆனால், வறட்சியால் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு வரும் நிலையில், எங்களின் விவசாய நிலங்களை அழிக்க விடமாட்டோம். விமான நிலைய விரிவாக்கத்துக்காக ஒரு அடி நிலத்தைக்கூட கொடுக்க மாட்டோம் என்று ஒட்டுமொத்த விவசாயிகளும் தெரிவித்தனர். இதனால், இந்த கூட்டம் எந்தவித தீர்வுமின்றி முடிந்தது. உயர் அதிகாரிகள் ஆலோசனை பெற்று, மீண்டும் கூட்டம் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024