Thursday, June 15, 2017

லண்டனில் பயங்கரம்: 27 மாடி குடியிருப்பில் தீ விபத்து :12 பேர் உடல்கருகி சாவு

2017-06-15@ 01:10:46  DINAKARAN




* 75க்கும் மேற்பட்டோர் படுகாயம்
* தீவிரவாதிகள் தாக்குதலா?

லண்டன்: லண்டனில் 27 மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி12 பேர் பலியானார்கள். இது தீவிரவாத செயலா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.இங்கிலாந்து தலைநகர் லண்டனின் மத்தியப் பகுதியில் உள்ள லான்கேஸ்டர் வெஸ்ட் எஸ்டேட்டில் கிரென்பெல் டவர் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு இங்கிலாந்து நேரப்படி அதிகாலை 1.16 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் பற்றிய தீ மளமளவென கட்டிடம் முழுக்க பரவியதால் குடியிருப்புவாசிகளில் பலர் கட்டிடத்தினுள் சிக்கிக்கொண்டனர். இதில் வசித்தவர்கள் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். எனவே அதிகாலை நேரத்தில் ரம்ஜான் நோன்பு அனுசரிக்கும் முன் உணவு எடுத்துக்கொள்ள எழுந்திருந்தனர்.
அந்த நேரத்தில் தீ பற்றியதால் அதிவேகமாக மற்ற குடியிருப்பில் வசிப்பவர்களையும் எழுப்பி தப்பினர். அதற்குள் தீ வேகமாக பற்றிக்கொண்டது.

பலர் பத்திரமாக வெளியே வந்தாலும், உள்ளே சிக்கிக் கொண்ட சிலர், உயிரை காப்பாற்ற மாடியில் இருந்து குதித்தனர். 10வது மாடியிலிருந்து வீசப்பட்ட குழந்தை: இதில் 10வது மாடியில் இருந்து ஒரு குழந்தையை ஒரு பெண் தூக்கி வீசினார். அதை கீழே நின்ற ஒருவர் பத்திரமாக பிடித்தார். இதனால் அந்த குழந்தை உயிர் தப்பியது. இந்த தீ விபத்தில் இதுவரை 12 பேர் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது. 75க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மீட்பு பணியில் 250 தீயணைப்பு வீரர்கள் களம் இறங்கி பொதுமக்களை பத்திரமாக மீட்டனர். 100க்கும் மேற்பட்ட மருத்துவ வாகனங்கள் குடியிருப்பு அருகே நிறுத்தப்பட்டு காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அந்த கட்டிடத்தில் சுமார் 300 முதல் 500 பேர் வரை இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிகிச்சை பெறும் 50 பேர் தவிர மீதமுள்ளவர்கள் எத்தனை பேர், அவர்கள் கதி என்ன என்ற விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். எனவே பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிகிறது. 27 மாடியும் முழுவதுமாக பற்றி எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதையடுத்து போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்த தீ விபத்து எப்படி நடந்தது என்று தெரியவில்லை. இது தீவிரவாதிகள் தாக்குதலா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கட்டிடத்தில் சிக்கியுள்ள ஒருவர்.

* கென்சிங்டன் செல்சியா அமைப்பு சார்பில் 1974ல் இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது.
* மொத்தம் 120 பிளாட்கள் உள்ள இந்த குடியிருப்பு 27 மாடி கொண்டது. இதில் 20 மாடி குடியிருப்பாகவும், மற்ற 7 மாடிகள் மற்ற பயன்பாட்டிற்காகவும் அமைக்கப்பட்டு இருந்தது.
* 2016ம் ஆண்டு ஒட்டுமொத்தமாக இந்த குடியிருப்பு மறுசீரமைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...