Friday, June 2, 2017


வெயில் அளவு சரிய துவங்கியது : ஜூன் 4 முதல் பரவலாகும் மழை
பதிவு செய்த நாள்01ஜூன் 2017 23:01

தென்மேற்கு பருவமழை காலம் துவங்கியுள்ளதால், நாடு முழுவதும், பரவலாக மழை பெய்து வருகிறது. வெயிலின் அளவும் குறைய துவங்கி உள்ளது.தென்மேற்கு பருவமழை, மே, 30ல், துவங்கியது. அரபிக்கடலில் இருந்து வீசும் தென்மேற்கு பருவக்காற்று வலுவாகி உள்ளதால், அக்கடலை ஒட்டிய கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, கோவா பகுதிகளில், மழை பெய்து வருகிறது. வங்ககடல் பகுதியில், தென்மேற்கு பருவமழையின் நிழற் பகுதிகளான, அசாம், மேகாலயா, ஒடிசா போன்ற மாநிலங்களிலும், பரவலாக மழை பெய்கிறது.தமிழகத்தில் முதற்கட்டமாக, நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் எல்லையோர பகுதிகளில் மழை துவங்கி உள்ளது. மற்ற இடங்களில், சாரல் காற்று வீச துவங்கி உள்ளது. வரும், 4ம் தேதி முதல், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில், மாநிலம் முழுவதும், அதிகபட்ச வெப்ப நிலையின் அளவும் குறைய துவங்கி உள்ளது. கோடையில், 44 டிகிரி செல்சியசுக்கு மேல், வெயில் எகிறிய திருத்தணியில், 41.5; வேலுாரில், 40.7; கரூர் பரமத்தியில், 40.2 டிகிரி செல்சியசாக வெயில்
குறைந்தது. அதேபோல, சென்னை உட்பட, மற்ற பகுதிகளிலும், வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.நேற்று காலை 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், வால்பாறை, பேச்சிப்பாறை, மதுரையில் 3 செ.மீ., சின்னக்கல்லார் 2; கோத்தகிரி, மருங்காபுரி, கொடைக்கானலில்,
1 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024