Sunday, June 11, 2017

4G டெக்னாலஜியில் இந்தியாவின் ரிப்போர்ட் கார்டு... காப்பாற்றியதா ஜியோ?
கருப்பு

4G நெட்வொர்க் சேவையின் வளர்ச்சியானது, இந்திய தொலைதொடர்புத் துறையில் மட்டுமில்லாமல், மொபைல் சந்தையிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாற்றத்தில், ஜியோ நிறுவனத்துக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது. போட்டியைச் சமாளிப்பதற்காக மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள், குறைந்த விலைக்கு அதிக அளவிலான டேட்டாவை வழங்க ஆரம்பித்ததால், 4G சேவை அசுரவேகத்தில் வளர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால், தற்போது 4G சேவையின் தரம் உயர்ந்திருப்பதோடு, விலை குறைந்திருக்கிறது.



லண்டனைச் சேர்ந்த 'ஓபன்சிக்னல்' என்ற நிறுவனம், 4G நெட்வொர்க் பயன்பாட்டில் இருக்கும் 75 நாடுகளில் ஓர் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவில் 2G, 3G போன்ற மற்ற சேவைகளைவிட, 4G சேவையை அதிகமாகப் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில், இந்தியா 15-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஜியோ நிறுவனம் குறுகிய காலத்தில், மிக விரைவில் 10 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்றது இதற்கு ஒரு மிக முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது. மேலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டால், இந்தியாவில் தான் மிகக்குறுகிய காலத்தில், 4G சேவை அதிவேகமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது.

4G சேவையை அதிகமாகப் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் தென்கொரியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. அங்கு 96.38 சதவிகிதப் பேர் 4G சேவையைப் பயன்படுத்துகின்றனர். தொலைதொடர்புத் துறையில் தென்கொரியாவின் வளர்ச்சி அசாத்தியமானது. 5G நெட்வொர்க் கூட தென்கொரியாவில் தான் முதன்முதலாக அறிமுகமாகும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 71.6 சதவிகிதமாக இருந்த 4G பயனாளர்களின் எண்ணிக்கை, தற்போது 81.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மேலும், இந்தியாவில் 4G நெட்வொர்க் சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில், சுமார் 60 சதவிகிதத்தை ஜியோ நிறுவனம் பிடித்திருக்கிறது.

4G சேவையை அதிகமாகப் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் முன்னேறியிருந்தாலும், டேட்டா ஸ்பீடு அடிப்படையிலான பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தையே (74-வது இடம்) இந்தியா பிடித்திருக்கிறது. உலக அளவில் 4G நெட்வொர்க் டேட்டா ஸ்பீடு சராசரியாக 17.4 Mbps என்ற அளவில் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் 4G நெட்வொர்க் டேட்டா ஸ்பீடு சராசரி வெறும் 5.2 Mbps தான். இது 3G சேவையின் உலக சராசரியான 4.4 Mbps ஸ்பீடைவிட சிறிது மட்டுமே அதிகம். இதனால்தான், டேட்டா ஸ்பீடு விஷயத்தில் இந்தியாவால் கடைசிக்கு முந்தைய இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்துள்ளது. 4G டேட்டா ஸ்பீடு பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தையும், தென்கொரியா இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கின்றன.



இந்தியாவில் தடையில்லாமல் 4G சேவை வழங்கும் நிறுவனங்கள் பட்டியலில் ஜியோ நிறுவனம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. ஆய்வில் 91.6 சதவிகிதம் அளவுக்கு ஜியோ நிறுவனத்தின் சிக்னல் தடையின்றிக் கிடைத்திருக்கிறது. ஆனால், டேட்டா ஸ்பீடைப் பொறுத்தவரை, ஏர்டெல் நிறுவனம்தான் இந்தியாவில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. ஏர்டெல் நிறுவனத்தின் சராசரி டேட்டா டவுன்லோடு ஸ்பீடு 11.53 Mbps. ஆனால் ஜியோ நிறுவனத்தின் சராசரி டேட்டா டவுன்லோடு ஸ்பீடு 3.92 Mbps மட்டுமே பதிவாகியுள்ளது.

அதிக வாடிக்கையாளர்களைப் பெற்று ஜியோ நிறுவனம் அசுர வேகத்தில் வளர்ந்துவந்தாலும், டேட்டா ஸ்பீடு விஷயத்தில் கவனம் செலுத்தியே ஆகவேண்டும் என்பதையே இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024