Friday, June 9, 2017

ஒரே மாதத்தில் 7 விபத்துகள்... பாம்பன் பாலத்தில் தொடரும் துயரம்
இரா.மோகன்
உ.பாண்டி

சென்னை விமான நிலையத்துக்கு இணையாக விபத்து நடப்பதில் பாம்பன் சாலை பாலம் சாதனை படைத்து வருகிறது என்றால் அது மிகையில்லை. காரணம் கடந்த ஒரு மாத காலத்தில் விபத்து நடக்காத நாள்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு நாள்தோறும் இங்கு விபத்துகள் நடந்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக ஏற்படாத விபத்துகள் கடந்த 30 நாள்களில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.



கடந்த 1974 ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதி முன்னிலையில் பிரதமர் இந்திரா காந்தியினால் பாம்பன் பாலம் அடிக்கல் நாட்டப்பட்டது. 19.26 கோடி ரூபாய் செலவில் சுமார் 2.5 கி.மீ தூரம் நாட்டின் நிலப்பரப்பை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் வகையில் கடல் மேல் பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. பல்வேறு காரணங்களால் சுமார் 14 ஆண்டுகளுக்கு பின் 1988 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட பாம்பன் பாலம் 'அன்னை இந்திரா காந்தி பாலம்' என பெயரிடப்பட்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் திறக்கப்பட்டது. இந்த பாலத்தி்ன் மையப் பகுதி கப்பல்கள் செல்லும் வகையில் இரும்பு இணைப்புகள் மூலம் பிணைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் வீசும் காற்றில் அதிக உப்பு தன்மை இருப்பதால் இந்த இரும்பு இணைப்புகள் துருப்பிடித்து அவ்வப்போது சேதமடைந்து விடும். இதனால் பாலத்தினை வாகனங்கள் கடக்கும்போது அதிர்வு ஏற்படும். ஆனாலும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்து கொண்டு அரசு பேருந்து ஒன்று கடலில் விழுந்து 8 பேர் பலியான சம்பவத்தை தவிர சொல்லிக் கொள்ளும்படியான விபத்துகள் நடந்ததில்லை.

இந்நிலையில் பாலத்தை சீர்படுத்த கடந்த ஆண்டு 18.56 கோடி ரூபாய் செலவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பின்னரும் பாலத்தின் மேற்பகுதி மற்றும் இணைப்பு பகுதிகள் சேதமடைந்து வந்தன.



இதனை சீர்படுத்த 2.70 கோடி ரூபாய் செலவில் வழுவழுப்பான ரப்பர் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சுண்ணாம்பு, தார் மற்றும் குவாரி துகள்கள் கொண்டு அமைக்கப்படும் இந்த சாலையில் கடந்த ஒரு மாத காலத்தில் எண்ணற்ற விபத்துகள் நடந்து வருகின்றன. ராமேஸ்வரம் வரும் சுற்றுலா வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், டூ வீலர்கள் என அனைத்து வகை வாகனங்களும் இந்த விபத்தில் சிக்கியுள்ளன. வெயில் மற்றும் மழை நேரங்களில் புதிதாக போடப்பட்ட ரப்பர் சாலை இளகி விடுகிறது. இதனால் வேகமாக வரும் வாகனங்கள் தங்கள் வேகத்தை கட்டுப்படுத்த பிரேக் உபயோகித்தால் அவை முழுமையாக இயங்குவதில்லை. இதனால் எதிரில் செல்லும் வாகனங்கள் மீதோ தடுப்பு சுவர் மற்றும் விளக்கு கம்பங்கள் மீதோ மோதி விபத்தில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது.

புதிய சாலையினால் ஏற்பட்ட விபத்துகளினால் கடந்த 2 நாள்களுக்கு முன் இளம்பெண் ஒருவர் பலியாகி உள்ளார். இந்த உயிர்ப் பலி மேலும் அதிகரிக்கும் முன்னர் இந்த புதிய சாலையில் உள்ள குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீவு பகுதியைச் சேர்ந்த அனைத்துக்கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

தரையில் விபத்து நடந்தாலே உயிர் பிழைப்பது பெரும்பாடு. இது கடலின் மேல் உள்ள பாலம். அர்த்தராத்திரி நேரங்களில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் உடலைக்கூட உடனடியாக எடுக்க முடியாது. எனவே தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

No comments:

Post a Comment

Driverless metro to begin trials at Madhavaram by '28

Driverless metro to begin trials at Madhavaram by '28  24.12.2024 Chennai : Chennai Metro Rail Limited (CMRL) will begin testing its fir...