Friday, June 9, 2017

சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க கல்குவாரி தண்ணீர் இன்று முதல் வினியோகம்




சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க கல்குவாரி தண்ணீர் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது.
ஜூன் 09, 2017, 05:00 AM]

சென்னை,

மழை இல்லாததால் சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் முற்றிலும் வறண்டு விட்டது. இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் தேங்கி உள்ள நீரை பயன்படுத்த சென்னை குடிநீர் வாரியம் ஆய்வு செய்தது.

இதனையடுத்து முதல்கட்டமாக காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அருகே சிக்கராயபுரத்தில் உள்ள 22–க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. பல அடி ஆழத்தில் உள்ள குவாரியில் இருந்து தண்ணீரை எடுப்பது குறித்து பல்வேறு ஆய்வுகள், சோதனைகள் செய்யப்பட்டன. தேங்கிய நீரின் தரத்தை நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

கல்குவாரி தண்ணீர்

செம்பரம்பாக்கம் ஏரிக்கரை அருகே உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் கல்குவாரி நீர் சுத்திகரிக்கப்பட்டது. அப்போது அந்த நீர் குடிநீருக்கு உகந்தது என தெரியவந்தது. இதனையடுத்து குவாரிகளில் உள்ள நீரை குழாய்கள் மூலம் செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வந்து சுத்திகரித்து குடிநீர் வினியோகத்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, ரூ.13.63 கோடி மதிப்பீட்டில் திட்டம் வடிவமைக்கப்பட்டு, தற்போது செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

இவ்வாறு தினமும் 3 கோடி லிட்டர் வீதம் 300 கோடி லிட்டர் நீர் 100 நாட்களுக்கு பெற திட்டமிடப்பட்டது. இதற்காக 4 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் பதிக்கும் பணிகள், நீரேற்றுதலுக்கான பம்புசெட்டுகள் மற்றும் ஜெனரேட்டர்கள் அமைக்கும் பணிகள் நடந்தன. இந்த பணிகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் 30 நாட்களுக்குள் முடிக்கப்பட்டன.

இன்று வினியோகம்

இதனைத்தொடர்ந்து கடந்த 2–ந்தேதி முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. சுத்திகரிக்கப்பட்ட நீரின் தரம் திருப்திகரமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை பெருநகரத்தின் குடிநீர் தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் குவாரி நீர் இன்று (வெள்ளிக் கிழமை) முதல் வழங்கப்படுகிறது.

இந்த பணியை குறைவான காலகட்டத்தில் வடிவமைத்து நிறைவேற்றிய தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, செயற்பொறியாளர் பரஞ்ஜோதி, உதவி செயற்பொறியாளர்கள் ஜெய்சங்கர், லெனின், சதீஷ், ஆகியோரை சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் வி.அருண் ராய் பாராட்டினார்.

மேற்கண்ட தகவலை அதிகாரிகள் கூறினார்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024