Friday, June 9, 2017

என் குரலில் பேசி ஏமாற்றினால், விளைவுகள் கடுமையாக இருக்கும்!” எஸ்.ஜானகி ஆவேசம்

ANANDARAJ K





ரேடியோ பண்பலை நிகழ்ச்சியில், தன் குரலில் பேசிய நபரால் கடும் கோபத்தில் இருக்கிறார், பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி. ''இது, மிகப்பெரிய மோசடி வேலை. இதனால் நான் கடும் மன உளைச்சலில் இருக்கிறேன்' என ஆவேசப்பட்டுள்ளார்.

ஜூன் 2 ஆம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாள். அன்றைய தினம், பிரபல ரேடியோ பண்பலையில், ரசிகர்கள் பங்கேற்று இளையராஜாவைப் பற்றி பேசும் சிறப்பு நேரலை நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் பாடகி எஸ்.ஜானகியே போன் செய்து, இளையராஜாவைப் புகழ்வது போலவும், ஒரு பாடலைப் பாடுவது போலவும் ஒலிபரப்பானது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அவரிடம் பேசியபோது, ''அப்படி நான் எதுவும் பேசவோ, பாடவோ இல்லை. ஒலிபரப்பானது என் குரலே இல்லை'' எனக் கொந்தளித்த எஸ்.ஜானகியைக் கூலாக்கி பேச வைத்தோம்.



"அந்தத் தனியார் பண்பலையில் ஒலிபரப்பான நிகழ்ச்சியில் நான் பேசுவதுபோல ஒலிபரப்பான ஆடியோவை என் ரசிகர்கள் பலரும் எனக்கு அனுப்பினார்கள். 'இது உங்கள் குரல் போல் இல்லையே' என்று சொல்லியிருந்தார்கள். 'நான் எதுவும் பேசவில்லையே. பேட்டியும் கொடுக்கவில்லையே' என்ற குழப்பத்துடன் அந்த ஆடியோவைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இளையராஜா பிறந்தநாள் தொடர்பான அந்நிகழ்ச்சியில் என் குரலில் வேறு யாரோ பேசியிருக்கிறார். அதுவும் என் கருத்துகளுக்கு மாறான கருத்தில் அவர் பேசியிருப்பது எனக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. உடனே, சம்பந்தப்பட்ட பண்பலை நிறுவனத்துக்குப் போன்செய்து விசாரித்தேன். 'பாடகி ஜானகி பேசுகிறேன் என்றதாலும், உங்கள் குரலைப்போலவே இருந்ததாலும் நாங்களும் ஆரம்பத்தில் நம்பிவிட்டோம். கொஞ்ச நேரம் கழித்துதான் அந்தக் குரலில் சில மாற்றத்தைக் கவனித்து சந்தேகப்பட்டோம். ஆனால், நேரலை நிகழ்ச்சி என்பதால், நடுவில் குறுக்கிட முடியவில்லை. பிறகு, அந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டு விசாரித்தபோதுதான், பேசியது ஓர் ஆண் என்பது தெரியவந்தது. அவரைக் கடுமையாக எச்சரித்தோம்' என்று சொன்னதோடு நடந்த நிகழ்வுக்கு மன்னிப்பும் கேட்டார்கள்.

ஆனால், நடந்தது ரசிகர்களுக்குத் தெரியாதல்லவா... அந்த நிகழ்ச்சியைக் கேட்ட ரசிகர்களும், இனி அந்த ஆடியோ பதிவை சமூக வலைத்தளங்களில் கேட்கும் ரசிகர்களும், உண்மையாகவே நான் பேசியிருப்பதாகவே நினைப்பார்கள் அல்லவா? ஒருவர் குரலில் பேசி மற்றவர்களை ஏமாற்றுவது மிகப்பெரிய மோசடி வேலை. ஓர் ஆண், பெண் குரலில் பேசி ஏமாற்றுவது மிகவும் கீழ்த்தரமான செயல். நடந்த இச்செயலால் நான் மிகவும் மன வேதனை அடைந்திருக்கிறேன். இனியும் இதுமாதிரியான நிகழ்வுகள் தொடரத்தானே செய்யும். சம்பந்தப்பட்ட நபர்மீது காவல் துறையில் புகார் அளிக்கலாம் என்றுதான் இருந்தேன். ஆனால், அவர் அறியாமையாலும் செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அதனால், அவர் செய்த தவறை மன்னித்துவிட்டேன். இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும். ஒருவரைப் போலவே பேசி ஏமாற்றுவது சட்டப்படி குற்றம். கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய இதுபோன்ற செயல்பாடுகளில் என்னுடைய ரசிகர்கள் யாரும் ஈடுபட வேண்டாம். மீறி யாராவது என் குரலில் பேசி ஏமாற்றினால், நிச்சயமாக போலீஸில் புகார் அளித்து நடவடிக்கை எடுப்பேன். கடும் விளைவுகளையும் சந்திக்க நேரிடும்" என ஆவேசமாக முடித்தார் எஸ்.ஜானகி.

இனிமையான ஒரு நிகழ்ச்சி, யாரோ ஒருவரின் தவறான செயலால், பலருக்கும் வேதனையைத் தந்துள்ளது. இனி இதுபோன்று நிகழ்வுகள் நடக்காது என நம்புவோம்!

No comments:

Post a Comment

Driverless metro to begin trials at Madhavaram by '28

Driverless metro to begin trials at Madhavaram by '28  24.12.2024 Chennai : Chennai Metro Rail Limited (CMRL) will begin testing its fir...