''ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போட்டதில்ல. ஆனா, அ.தி.மு.க-வ நினைச்சா கவலையா இருக்கு!" ஜெ. சமாதியில் பெண்கள் குரல் #SpotVisit
குமரகுருபரன்
மு.பார்த்தசாரதி
“தமிழ்நாட்டுல என்னவெல்லாமோ நடந்துகிட்டு இருக்கு. ஆளுங்கட்சியான அதிமுக உடைஞ்சு மூணு கட்சியா கிடக்குது. இப்போத்தானே தெரியுது. அந்த மனுஷியோட அருமை பெருமையெல்லாம். ஒண்ணே ஒண்ணு, ஒளிவு மறைவில்லாம வெளிப்படையாவே சொல்லுறேன்யா. நான் ஓட்டுப்போட்டது என்னவோ வேற ஒரு கட்சிக்குத்தான். ஆனா, ஜெயலலிதாம்மா இறந்ததுக்கு அப்பறமா, இத்தனை வருசத்துல ஒருமுறை கூட அவங்களுக்கு ஓட்டுபோடாம விட்டுட்டோமேன்னு நெனச்சு தவியா தவிக்குறேன்” மெரினாவிலுள்ள அம்மா சமாதியை சுற்றிப்பார்க்க வந்திருக்கும் சேலத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரியின் கண்கள் கசிய வந்துவிழும் வார்த்தைகள் இது.
அதிமுக ஏற்கெனவே இரண்டு அணிகளாகப் பிரிந்து கிடக்கும் சூழலில் நேற்று முன்தினம் டெல்லி சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த டி.டி.வி.தினகரனின் பின்னால் மூன்றாவதாக ஓர் அணி திரண்டு நிற்கிறது. என்னடா இது தமிழகத்துக்கு வந்த சோதனை. அதிமுகவுக்கு எப்போ முடிவு கிடைக்கும். தமிழ்நாட்டுக்கு எப்போ விடிவு பொறக்கும்னு ஏங்க ஆரம்பித்துவிட்டார்கள் நம் மக்கள். ஒருபக்கம் தினகரனின் வருகையை ஆதரிப்பதாக பல எம்.எல்.ஏக்கள் சொன்னாலும் மறுபக்கம் அதையெல்லாம் நம் நெட்டிசன்கள் ஒரே ஸ்டேட்டஸில் காலி பண்ணிவிடுகிறார்கள்.
எம் மக்காள்...
தூதுவன் ஒருவன் வருவான்...
அந்தச் சமயத்தில் மாரி பொழியும்...
அவர்தான் டி.டி.வி. தினகரன்
இது தினகரனின் வருகையையும் அன்று லேசாக மழை பெய்ததையும் வைத்து நெட்டிசன் ஒருவர் கலாய்த்து போட்டிருந்த ஸ்டேட்டஸ். இது சாம்பிள்தான். இதேபோல பல ஸ்டேட்டஸ்கள் உலவிக்கொண்டிருக்கிறது. சமூக வலைதளம் தொடங்கி டீக்கடை பெஞ்ச் வரையிலும் முக்கியமான டாப்பிக்காக பேசப்படும் தினகரனின் மூன்றாவது அணி பற்றி ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு வரும் மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்ற ஆர்வத்தோடு மெரினா கிளம்பினோம்.
“நான் ஆத்தூர்ல இருந்து வர்றேன். அம்மா இடத்துக்கு இதுவரையிலும் நாலு முறை வந்திருக்கேன். அந்த அம்மா புண்ணியவதியா வாழ்ந்தவங்க. மக்களுக்கு தாராளமா நல்லது செஞ்சாங்க. அவங்க கண் அசைவுக்கே கட்டுப்பட்டு நின்னவங்க எல்லாரும் இப்போ நாம வச்சதுதான் சட்டம், அதிகாரம்னு தலையெடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. இவங்க இப்புடிலாம் அடிச்சிக்கும்போதுதான் தெரியுது இத்தனை வருசமா அந்த அம்மா இவங்களை கண்ட்ரோல்ல வெச்சிக்க எவ்ளோ கஷ்டப்பட்டுருப்பாங்கன்னு. அவங்க கஷ்டத்துக்கெல்லாம் ஒரு நல்ல முடிவு கிடைச்சா சரிதான்” என்கிறார் சிவகாமி.
“என்பேரு மகாலெட்சுமி. நான் காலேஜ் ஸ்டூடண்ட். அம்மா சமாதிக்கு இப்போதான் முதல்முறையா வர்றேன். இந்த இடத்தை ரொம்பவே நல்லா மெயிண்டெய்ன் பண்ணி வெச்சிருக்காங்க. ஆனா, அம்மாவோட கட்சிய மட்டும் நட்டாத்துல விட்டுட்டாங்க. யாரு எப்ப வருவாங்கன்னே தெரியல. வடிவேலு சொல்லுற மாதிரி திடீர் திடீர்னு ஒடையுதாம் சாயுதாம் மொமன்ட் தான் நியாபகத்துக்கு வருது” கூலாக சொல்கிறார் மகா.
“ஒரு குடும்பத்துக்குள்ள நாலு பேரை வச்சு சமாளிக்கவே முடியாது. ஆனா, அந்த அம்மா தமிழ்நாட்டையே கைக்குள்ள வெச்சிருந்தாங்க. அவங்க எனக்கு அடுத்து இவர்தான் முதல்வர்னு மறைமுகமா ஒருத்தர கைகாட்டிட்டு போனாங்க. அவர் கொஞ்ச நாள் இருந்தாரு. இப்போ வேற யாரோ ஒருத்தர் இருக்காராம். அவரு பேருகூட வாயில வரமாட்டேங்குது. இன்னைக்கு என்னடான்னா இன்னொருத்தரு வந்துடுவாருபோலன்னு பேசிக்கிட்டு இருக்காங்க. என்ன நடக்குதுண்ணே புரிய மாட்டிங்குது. அந்த அம்மா அரும்பாடுபட்டு வளத்த கட்சிய காப்பாத்த ஒருத்தரால கூடவா முடியாம போயிடுச்சு” வேதனையை வெளிப்படுத்துகிறார் துப்புரவுத் தொழிலாளியான செல்வி.
“இந்தியாவிலேயே மிகப்பெரிய கட்சிகள்ல ஒன்னா இருந்த அதிமுக இப்போ அச்சாணி இல்லாத வண்டியோட நிலைமை எப்படியோ அப்படித்தான் கெடக்குது. நீ முதல்வரா நான் முதல்வராங்குற இவங்க போட்டியில அம்மாவோட கொள்கைய மதிக்காம போய்ட்டாங்க. ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், தினகரன் இவங்கள்ல யாரு வேணா முதல்வரா வரட்டும். ஆனா, எங்களுக்கு அம்மாவோட ஆசை நிறைவேறணும் அவ்ளோதான்” என்கிறார் ஜெஸி.
மழையில் முளைத்த காளான்களாய் யார் வேண்டுமானாலும் திடீர் திடீரென முளைக்கலாம். ஆனால், மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பவர்கள் வெகு சிலரே. சிந்திப்பார்களா தற்போதைய தலைவர்கள்.
No comments:
Post a Comment