பான் - ஆதார் இணைப்பு அவசியம் இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தற்போதைக்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானதா என்பது குறித்து அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
வழக்கின் பின்னணி
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண்ணை கட்டாயமாக்கியும், நிரந்தர பான் எண் பெற ஆதாரை அவசியமாக்கியும் மார்ச் மாதம் மத்திய அரசு அறிவித்தது.
பான் எண்ணை இணைப்பதன் மூலம் போலி பான் எண் பயன்படுத்தி வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க முடியும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கமளித்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "ஆதார் கட்டாயமல்ல என நாங்கள் உத்தரவு பிறப்பித்திருக்கும்போது நீங்கள் (மத்திய அரசு) எப்படி அதை கட்டாயமாக்கி உத்தரவிட முடியும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் ஏன் கட்டாயம் என்பதை அரசு விளக்க வேண்டும்" என்றனர்.
அப்போது குறுக்கிட்ட மத்திய அரசு தரப்பில் ஆஜரான அடர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, "ஷெல் நிறுவனங்கள் வாயிலாக நடைபெற்ற வரி ஏய்ப்பு பின்னணியில் போலி பான் எண்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. அதன் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்றார்.
இதைத் தொடர்ந்து நடந்த விசாரணைகளை அடுத்து, இன்று(வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷண் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment