பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இன்று கூடும் சட்டசபை கூட்டத்தில், புயல் வீசும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுங்கட்சியின், கூவத்துார் பேரம் தொடர்பாக, பிரச்னையை கிளப்ப, தி.மு.க., முடிவு செய்திருப்பதால், அமளி நிச்சயம். நாள்தோறும், ஏதாவது ஒரு பிரச்னையை எழுப்ப, எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதால், இன்னும், 24 நாட்களுக்கு பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இதற்கிடையில், ஜி.எஸ்.டி., உட்பட, முக்கிய மசோதாக்களும் நிறைவேற்றப்படும் வாய்ப்புகள் உள்ளன.
தமிழக அரசின், 2017 - 18ம் ஆண்டுக்கான பட்ஜெட், மார்ச், 16ல், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் முடிந்து, மார்ச், 24ல், சட்டசபை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
துவக்கம்
அதன்பின், துறை வாரியாக, மானியக் கோரிக்கை மீது விவாதம் நடத்தி, துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு, ஒப்புதல் பெறுவதற்காக, சட்டசபை கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது.
இன்று முதல், ஜூலை, 17 வரை, கூட்டம் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது, ஆளுங்கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.,க்கள், மூன்று அணிகளாக நிற்கின்றனர். பன்னீர் அணி மற்றும் தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் மற்றும் அமைச்சர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, ஒத்துழைப்பு அளிப்பதுசந்தேகம்.
தகவல்
சசிகலா குடும்பத்தினர், எம்.எல்.ஏ.,க்களை, கூவத்துார் சொகுசு விடுதியில் தங்க வைத்திருந்த போது, அவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய், கிலோ கணக்கில் தங்கம் வழங்கியதாக, தகவல் வெளியானது.தற்போது, அதை உறுதிப்படுத்தும் வகையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த, 'வீடியோ' காட்சிகள், 'டிவி'யில் ஒளிபரப்பானது.
கைது
சட்டசபையில் இந்த பிரச்னையை எழுப்ப, பிரதான எதிர்க்கட்சியான, தி.மு.க., முடிவு செய்துள்ளது. எனவே, அமளி நிச்சயம் என்பது உறுதியாகி உள்ளது. மேலும், குடிநீர் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட மக்கள் பிரச்னைகளும், லஞ்ச புகாரில் தினகரன் கைது, அமைச்சர் வீட்டில் சோதனை உள்ளிட்ட அரசியல் விவகாரங்களும், சபையில் புயலை கிளப்பும் என, கூறப்படுகிறது.தி.மு.க., தலைவர் கருணாநிதி,
சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டு, 60 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன. அதையொட்டி, சட்டசபையில் பாராட்டு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. அதை, ஆளுங்கட்சி ஏற்குமா என்பது தெரியவில்லை. இந்த விஷயமும், சட்டசபையில் பிரச்னையை ஏற்படுத்தக்கூடும்.
முடிவு
இவற்றுக்கு இடையில், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புக்கான மசோதா உட்பட, பல்வேறு முக்கிய சட்ட மசோதாக்களை நிறைவேற்றவும், அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஓட்டெடுப்பில், அரசுக்கு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் முழுமையாக ஆதரவு தருவரா என்ற கேள்வியும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. - நமது நிருபர் -
சட்டசபையில் இன்று...
சட்டசபையில் இன்று, வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை, மானியக் கோரிக்கை மீது, விவாதம் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள், விவாதத்தில் பங்கேற்று பேசுவர்.அதன்பின், வனத்துறை அமைச்சர் சீனிவாசன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர், விவாதத்திற்கு பதிலளித்து, துறையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவர்.
No comments:
Post a Comment