Saturday, June 10, 2017

மிதித்தால் மின்சாரம்- சீரடி கோயிலில் புதிய திட்டம்!
இரா.தமிழ்க்கனல்



இந்தியா என்ன, உலகம் முழுவதுமே எந்தக் கோயிலில்தான் பக்தர்கள் கூட்டம் இல்லை? நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டுதான் போகிறதே குறைந்தபாடில்லை. காரணங்கள் பலமாக இருந்தாலும் ஒரே இடத்தில் பெருகும் கூட்டத்தால் உண்டாகும் விளைவுகள் என்ன எனக் கேட்டால், பலரும் நம்மை வினோதமாகப் பார்க்கக்கூடும். ஆனால் சீரடி சாய்பாபா கோயிலுக்கு வரும் பக்தர்களால் என்ன பயன் என சிந்தித்தவர்களுக்கு அருமையான பலன் கிடைத்திருக்கிறது. அல்ல அல்ல அவர்களால் பக்தர் சமூகத்துக்கு அதிர்ச்சிதரும் மின்சாரப்பலன்- மின்சாரம் கிடைத்திருக்கிறது. ஆம், மின்சாரமேதான்!

சீரடி சாய்பாபா கோயிலின் நூற்றாண்டு வரும் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்குவதை முன்னிட்டு, பல நலத் திட்டங்களைச் செய்யவுள்ளதாக சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட் அறிவித்துள்ளது. சீரடி மற்றும் நாசிக்கிலும் அந்த இரு நகரங்களைச் சுற்றிலும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவது, மலர்க்கழிவிலிருந்து ஊதுபத்திகள் செய்வது ஆகியவற்றுடன் காலடிவிசையிலிருந்து மின்சாரம் தயாரிப்பையும் தொடங்கவும் சாய்பாபா டிரஸ்ட் தீர்மானித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரஸ்ட்டின் தலைவர் டாக்டர் சுரேஷ் ஹவார், “ சீரடி கோயிலுக்கு தினமும் சராசரியாக 50 ஆயிரம் பக்தர்கள் வந்துசெல்கின்றனர். அவர்களின் நடைமிதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றினால் பக்தர்கள் வரிசைக்கு அருகில் உள்ள விளக்குகள், மின்விசிறிகளை இயக்கமுடியும். இது வெற்றிபெறுமானால் இந்தியாவிலேயே முதல் வகைமாதிரியாக இருக்கும். அனைத்து பொது இடங்களிலும் இதுபோன்ற வசதியைச் செய்யமுடியும்” என்று தெரிவித்துள்ளார்.

சீரடி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சராசரியாக 50 ஆயிரமாக உள்ளது எனக் கணக்கிடப்பட்டு, அதன்படி மிதிமின்சார உற்பத்தியும் திட்டமிடப்பட்டுள்ளது. பக்தர்கள் நடை வழியில் பதிக்கப்படும் கற்களே, அவர்கள் மிதிக்கும்விசையை மின்னாற்றலாக மாற்றும். பக்தர்களின் மொத்த மிதிவிசையைப் பொறுத்தே மின்னுற்பத்தியின் அளவும் இருக்கும். இரண்டுக்கு இரண்டு அடி சதுரத்தில் 200 தரைக்கற்கள் பதிக்கப்படுகின்றன. ஒருவரின் மூலம் சராசரியாக 20 வாட் வினாடி மின்னாற்றல் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

'இரண்டு மாதங்களில் இத்திட்டத்தின் முதல் கட்டப் பணி முடிக்கப்படும்' என்று இத்திட்டத்துக்காக தரைக்கற்கள் பதிக்கும் தனியார் நிறுவனத்தின் பங்குதாரர் குருனால்நாயக் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024