Friday, June 9, 2017

வாட்ஸ்-அப்பில் செய்திகளை மாற்றி அனுப்பி விட்டீர்களா? உங்களை காப்பாற்ற புதிய வசதி விரைவில் அறிமுகம்!


பிரபல செய்தி பரிமாற்ற செயலியான வாட்ஸ்-அப்பில், இனி செய்திகளை தவறுதலாக மாற்றி அனுப்பி விட்டால், ஐந்து நிமிடத்திற்குள் சரி செய்து கொள்ளும் புதிய வசதியானது விரைவில் அறிமுகமாக உள்ளது.

உலக அளவில் பிரபலமான செய்தி பரிமாற்ற செயலிகளில் வாட்ஸ்-அப் முதலிடம் வகிக்கிறது. உலகம் முழுவதும் ஒரு மாதத்திற்கு ஏறக்குறைய 120 கோடி பேர் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன் 50 மொழிகளிலும் இந்த சேவையானது கிடைக்கின்றது.

10 இந்திய மொழிகளில் கிடைக்கும் இந்த சேவையை, இந்தியாவில் ஒரு மாதத்திற்கு சராசரியாக ஏறக்குறைய 20 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்

இப்படி பரவலாக உபயோகபடுத்தப்படும் இந்த சேவையில், சில சமயம் நாம் தவறுதலாக ஒருவருக்கு அனுப்ப வேண்டிய தகவலை மற்றொருவருக்கு அனுப்பி விடும் அபாயமுண்டு. உதாரணமாக உங்கள் பெண் தோழிக்கு அனுப்ப வேண்டிய செய்தியை நீங்கள் உங்கள் அலுவலக மேலாளருக்கு அனுப்பினால் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை ஊகிக்க வேண்டியதில்லை.

இது போன்ற தவறுகளில் இருந்து தப்பித்துக் கொள்ள ஒரு புதிய வசதியை வாட்ஸ்-அப் நிறுவனம் தற்பொழுது அறிமுகம் செய்ய உள்ளது. இது தொடர்பாக வாட்ஸ்-அப் செயலியின் புதிய தொழில்நுட்பங்களை முதலில் ஆய்வு செய்து பார்க்கும் 'வாபீட்டா இன்போ' என்னும் இணைய தளத்தில் வெளியாகியுள்ள செய்தி பின்வருமாறு:

வாட்ஸ்-அப் விரைவில் 'ரீகால்' என்னும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி நீங்கள் தவறுதலாக யாருக்கேனும் அனுப்பி விட்ட தகவலை,அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் திரும்ப பெற்றுக் கொண்டு விடலாம். இந்த வசதியானது செய்திகள் மட்டுமின்றி, படங்கள், காணொளிகள், ஆவணங்கள், ஜி.ஐ.எப் எனப்படும் நகரும் படங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் பொருந்தும்.

இந்த வசதியானது விரைவில்வெளியாக உள்ள வாட்ஸ்-அப்பின் புதிய "2.17.30+" வெர்ஷனில் உங்களுக்கு கிடைக்கும். அத்துடன் நீங்கள் அனுப்பி விட்ட செய்திகளை எடிட் செய்யும் வசதியையும் வாட்ஸ்-அப் நிறுவனமானது வழங்க உள்ளது. ஆனால் இந்த வசதியானது தற்பொழுது அனுப்பப்படும் செய்திகளுக்கு மட்டுமே பொருந்தும் ஒழிய பழைய செய்திகளுக்கு பயன்படுத்த முடியாது.

இவ்வாறு அந்த இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024