Tuesday, June 6, 2017

அரசுப் பள்ளி மாணவிகளை ஊக்குவிக்க விடுமுறை ஊதியத்தை செலவிடும் ஆசிரியர்

பொன்.தங்கராஜ்

கே.சுரேஷ்

கோடை விடுமுறைக் காலத்தில் பெறும் ஊதியம் முழுவதையும் பள்ளி மாணவிகளை ஊக்குவிக்கச் செலவிட்டு வருகிறார் புதுக்கோட்டை அரசுப் பள்ளி ஆசிரியர் பொன்.தங்கராஜ்.
புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் பொன்.தங்கராஜ். இவர், ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் கோடை விடுமுறைக் கால ஊதியத்தை, அப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்காக செலவிட்டு ஊக்கம் அளித்து வருகிறார்
தனது கல்விப் பணி குறித்து ‘தி இந்து’விடம் கூறியதாவது:
‘‘எனக்கு 49-வது வயதில்தான் (2010) ஆசிரியர் பணி கிடைத்து, புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பொறுப்பேற்றேன். சமூக அறிவியல் பாடம், போட்டித் தேர்வுகளுக்கு மிக முக்கியமானது. இதனால், இந்தப் பாடத்தைப் பற்றிய புரிதலை மாணவிகளிடையே ஏற்படுத்தவும், இப்பள்ளியை நாடிவரும் நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கு உதவிடும் வகையிலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் நூறு மதிப்பெண்கள் பெறும் மாணவிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வழங்கி வருகிறேன்.
இதுவரை 5 மாணவிகள் பரிசுத் தொகை பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 3 மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி, 99 மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு ரூ.1000 வீதமும், இந்த பாடத்தை ஆங்கில வழியில் படித்து நூறு மதிப்பெண்கள் பெறும் மாணவிகளுக்கு தலா ரூ.2 ஆயிரமும் அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மிகவும் பின்தங்கிய கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கும், நூலகங்களுக்கும் புரவலர் நிதி வழங்கி வருகிறேன்.
மேலும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற அரசுப் பணிகளுக்கு செல்வதற்கு வாய்ப்பு ஏற்படும் என்பதால், இந்த பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன், சிறப்புக் கையேடும் வழங்கப்படுகிறது. கோடை விடுமுறையான மே மாதத்துக்குரிய எனது ஊதியம் முழுவதையும், இப்பணிகளுக் காகவே செலவிட்டு வருகிறேன். மாணவப் பருவத்தில் நான் சந்தித்த வறுமையின் தாக்கமே இதற்குக் காரணம்’’ என்கிறார் ஆசிரியர் பொன்.தங்கராஜ்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024