Saturday, June 10, 2017

தீண்டிவிட்டு போன தீயே...மீண்டும் அழைப்போம் கணபதி ஹோமத்திற்கு...சென்னை சில்க்ஸ்-ன் உத்வேக விளம்பரம்!

சென்னை : தீ விபத்தில் சிக்கி உருக்குலைந்துள்ள சென்னை சில்க்ஸ் கட்டட மீண்டும் அதே இடத்தில் கட்டப்படும் என்று அந்த நிறுவனத்தினர் நம்பிக்கையூட்டும் விளம்பரத்தை செய்துள்ளனர்.

சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையில் உள்ள 'தி சென்னை சில்க்ஸ்' துணிக் கடையில் கடந்த மே 31ம் தேதி அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் போது உள்ளே சென்று தீயை அணைப்பதற்கான கட்டுமான வசதிகள் இல்லாததால் 3 நாட்களாக விட்டு விட்டு தீ எரிந்தது. இதனால் அந்தப் பகுதியில் செல்லவே கடந்த ஒரு வாரமாக மக்களுக்கு கெடுபிடிகள் விதிக்கப்பட்டன.

மூன்று நாட்களுக்குப் பிறகு ஜூன் 4ம் தேதி முதல் கட்டடம் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 3 நாட்களில் கட்டடம் முழுவதும் இடிக்கப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் கட்டட இடிபாட்டுப் பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக ஜா கட்டர் என்னும் ராட்சத கருவியைக் கொண்டு கட்டடம் இடிக்கும் பணி நடைபெறுகிறது.

சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் விட்டு விட்டு எரிந்த தீ விபத்து மக்கள் மத்தியில் ஒரு வித பீதியை ஏற்படுத்தியது. ஆனால் கட்டடம் எரியும் காட்சிகளை பார்த்து அதில் பணியாற்றியவர்கள் கண்ணீர் விட்டு கதறினர். தங்களின் பணி என்னவாகும், சம்பளம் என்னவாகும் என்று அனைவரும் கலக்கத்தில் இருந்தனர்.

ஆனால் பல கோடி இழப்புகளை சந்தித்த போதும் ஊழியர்களை கைவிடாத தி சென்னை சில்க்ஸ் நிர்வாகம், தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு ஜூன் 1ம் தேதியே சம்பளம் வழங்கியது. இதோடு பணியாளர்கள் சென்னை சில்க்ஸ்ன் வேறு கிளையில் பணியமர்த்தப்பட்டனர்.

இந்நிலையில் தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் இன்று உத்வேக விளம்பரம் ஒன்றை வெளியிட்டள்ளது. அதில்...

எனது உருவம்...என்னை உருவாக்கியவரின் வியர்வைத் துளிகள்!

எனது புகழ்...மக்கள் கொடுத்த நற்பரிசு!

எனது கடமை...என்னுள் உழைத்துக் கொண்டிருக்கும் பணியாளர்கள்!

குடும்பங்களின் குதூகலத்துடன், சிறார்களின் சிறு கனவுகள்...

ஆடவரின் ஆர்ப்பரிப்புகள்..

மங்கை, மடந்தையகளின் கொண்டாட்டங்கள்...

மணமக்களின் மகிழ்ச்சிகள்...

என எல்லாம் அரங்கேறும்

அரண்மனை நான்....

அனைத்தும் அறிந்த தீயே...

மறந்தும் என்னை தழுவலாமா?

நொறுங்கியது நான் மட்டுமல்ல...கணக்கில்லா இதயங்களும் தான்....

விரைவில் உன்னையும் அழைப்போம் இந்த இடத்திற்கு...

கணபதி ஹோமமாய்....

என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. மனித வாழ்வில் தோல்வி என்பது சகஜம் அதை வென்று மீண்டும் வாழ்வை தொடங்க வேண்டும் என்று பரைசாற்றும் இவர்களின் விளம்பரம், எதற்கெடுத்தாலும் சோர்ந்து போகும் இன்றைய தலைமுறைக்கு உற்சாக டானிக் என்பது மறுப்பதற்கில்லை.

source: oneindia.com

Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024