Saturday, June 10, 2017


குழப்பும் வலைதளங்கள்

By லோ. வேல்முருகன்  |   Published on : 10th June 2017 02:16 AM  |   
இப்போது அனைவரின் கைகளிலும் அறிதிறன்பேசி (ஸ்மார்ட் போன்) உள்ளது. அதன் மூலம் தங்களுக்கு வேண்டிய தகவல்களை இணையதளத்தை பயன்படுத்தி உடனுக்குடன் பெற்றுவிடுகின்றனர்.
முன்பெல்லாம் நமக்கு மின்னஞ்சலில் வந்த செய்திகளை தெரிந்துகொள்ள இணையதள வசதியுடன் கூடிய கணினி தேவைப்பட்டது. அந்த வசதி இல்லாதவர்கள் இணைய மையங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது.
அம்மையங்கள் மணிக்கு 60 ரூபாய் என்ற அளவில் கட்டணங்களை வசூலித்தன. இந்த கட்டணம் நாளடைவில் படிப்படியாக குறைந்து மணிக்கு ரூ.20 என்ற அளவில் தற்போது வசூலித்து வரு
கின்றனர்.
கட்டணத்தை குறைத்தாலும் அந்த மையங்களில் முன்பு இருந்தது போல் தனி அறை, ஏசி போன்ற வசதிகள் இல்லை. இதுபோன்ற வசதிகள் செய்யப்படாததற்கு அம்மையங்கள் லாபகரமாக இயங்காததே காரணம்.
இணையதள மையங்கள் லாபகரமாக இயங்காததற்கு காரணம், செல்லிடப்பேசி வழியே ஒவ்வொருவரின் கையிலும் இணையதள வசதியை அலைபேசி நிறுவனங்கள் வழங்கியதுதான். இணையதள வசதிகளை அலைபேசி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும்போது வாடிக்கையாளர்களை கவர பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.
அறிமுக சலுகைகளால் கவரப்படும் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையோ இல்லையோ இலவசமாக கிடைக்கிறது என நான்கைந்து சிம் கார்டுகளை வாங்கி பர்சில் வைத்துக் கொள்கின்றனர்.
அவ்வாறு வாங்கி வைத்திருக்கும் சிம் கார்டுகளை பயன்படுத்தி முகநூல், கட்செவி அஞ்சல் மூலம் நண்பர்கள், உறவினர்களுக்கு செய்திகளை அனுப்பி வருகின்றனர்.
அவ்வாறு அனுப்பப்படும் செய்தி தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையில் இருந்தால் பரவாயில்லை. அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது.
உதாரணமாக நாம் உணவில் சேர்க்கும் அயோடின் உப்பால் சிறுநீரகம் கெட்டுவிடும். எனவே அதனை பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பதிலாக இந்துப்பு என்ற ஒன்று உள்ளதும் அதனை பயன்படுத்துங்கள் என்று செய்திகள் வருகின்றன.
அப்படி என்றால் இத்தனை நாள்களாக அயோடின் கலந்த உப்பை சாப்பிட்டவர்களின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதா? இதேபோல் தனியார் நிறுவன பற்பசை ஒன்றில் நிகோடிக் அமிலம் உள்ளதால் அந்த பற்பசையை பயன்படுத்த வேண்டாம் எனவும், கோதுமை உணவை சாப்பிட்டால் தைராய்டு குறைபாடு ஏற்பட்டு மலட்டுத் தன்மை உருவாகும் எனவும் செய்திகள் பரப்பப்படுகின்றன.
இதுபோன்ற செய்திகளை உருவாக்குபவர்கள் யார், அதில் எந்த அளவு உண்மை தன்மை உள்ளது என்று தெரியவில்லை. அந்த செய்தி உண்மையானதானா அல்லது தவறானதா எனக்கூடத் தெரியாமல் நிறைய பேர் அதனை தமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.
சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் யார் வேண்டுமானலும் எந்தக் கருத்தையும் கூறலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. அந்தக் கருத்து பிறருக்கு நன்மை பயக்கும் வகையிலும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். யாரையும் குழப்பத்தில் ஆழ்த்தக் கூடாது.
கருத்து கூற விரும்புபவர்கள் உண்மையான செய்திகளை மட்டும் தெரிவிக்க வேண்டும். அதற்கான ஆதாரங்களையும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். இதுபோன்று சமூக வலைதளம் மூலம் உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்பும் நபர்களை அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும்.
ஏனென்றால் இதே நீலை நீடித்தால் தவறான தகவல்களை தரும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகிடும்.
ஏற்கெனவே அதிகம் விளம்பரப்படுத்தப்பட்டு அனைவரிடத்திலும் பிரபலம் அடைந்த தனியார் நிறுவன நூடுல்ஸ் உணவுப்பொருளில் அளவுக்கு அதிகமாக ரசாயன உப்பான மோனோசோடியம் க்ளூட்டோமேட் உள்ளது எனக் கண்டறியப்பட்டு, அது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது தனியார் நிறுவனப் பாலிலும் உடலுக்கு தீங்கு தரக்கூடிய ரசாயனங்கள் கலக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
எனவே எந்த உணவுப் பொருள் உடலுக்கு நல்லது என்று தெரியாமல் மக்கள் குழப்பத்தில் இருக்கும் நிலையில் சமூக ஊடகங்களான முகநூல், கட்செவி அஞ்சலில் குறிப்பிட்ட நிறுவன எண்ணெயை பயன்படுத்த வேண்டாம் என்றும் குறிப்பிட்ட நிறுவன பற்பசையைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் செய்திகள் வருகின்றன. இதுபோன்ற செய்திகளால் மக்களுக்கு ஏற்படும் குழப்பத்தைப் போக்க வேண்டியது அரசின் கடமை.
வெளியூர்களிலிருந்து வரும் உறவினர்கள், நண்பர்களுக்கு நம்முடைய வீட்டு விலாசத்தைக் கூறி வரச் சொன்னால், அவர்கள் ஏற்கெனவே நம் வீட்டுக்கு
வந்தவர் என்றால் எந்தவித அலைச்சலும் இன்றி சரியாக நமது வீட்டை வந்தடைவர்.
புதிதாக நம் வீட்டிற்கு வருபவர் என்றால் கையில் விலாசம் இருந்தாலும் சிலரிடமாவது விசாரிக்க வேண்டியிருக்கும். ஆனால் செல்லிடப்பேசி வைத்திருப்பவர்களுக்கு இதுபோன்ற அலைச்சல்கள், நேர விரயம் ஆகாது.
ஏனென்றால் செல்லிடப்பேசியில் கட்செவி அஞ்சல் இருந்தால் அதில் சென்று லோகேஷன் என்ற ஆப்சனை கிளிக் செய்து தேடி வரும் நபரின் செல்லிடப்பேசிக்கு அனுப்பிவிட்டால் போதுமானது. அவர் யாரிடமும் விசாரிக்க வேண்டியதில்லை.
செல்லிடப்பேசி தரும் தகவல்கள் மூலமே குறிப்பிட்ட இடத்தை அடைய முடியும். இதுபோன்று நல்ல தகவல்களை தரும் செல்லிடப்பேசியைப் பயன்படுத்தி தவறான செய்திகளை பரப்பி வருவது மிகவும் வகுத்தமளிக்கிறது.

    No comments:

    Post a Comment

    NEWS TODAY 23 AND 24.12.2024