Tuesday, June 6, 2017

நம்மைக் காக்கும் மரங்கள்

By லோ. வேல்முருகன்  |   Published on : 06th June 2017 01:28 AM  
தற்போது நிலவும் அதிக அளவிலான வெப்பம், அனல்காற்று மழையின்மை, வறட்சி போன்றவை மரங்களின் முக்கியத்துவத்தை மனிதர்களிடையே உணர்த்தியுள்ளது. ஆனால் முக்கியத்துவத்தை உணர்ந்த அளவுக்கு மரக்கன்று நட வேண்டும் என்ற ஆர்வம் பெரும்பாலானோர்களிடம் இல்லை.
அற்ப காரணங்களுக்காக மரங்களை வெட்டும் நிகழ்வு தமிழகத்தில் மட்டும் தான் நிகழ்கிறது. ஒரு சில மரங்கள் மின்கம்பிகள் மீது உரசுகிறது என்பதற்காக பல ஆண்டுகள் வளர்ந்து பலருக்கு நிழல் தந்து கொண்டிருந்த மரங்களை நாம் ஒரு சில நிமிடங்களில் நவீன கருவிகளைக் கொண்டு வெட்டிச் சாய்கிறோம். மரங்கள் மின்கம்பிகள் மீது உரசும் போது சம்பந்தப்பட்ட மரத்தின் ஒரு சில கிளைகளை மட்டும் வெட்டினால் போதும்.
அதனை விட்டு விட்டு கிளைகளை மட்டும் வெட்டினால் பிற்காலத்திலும் அந்த மரத்தில் கிளைகள் வளர்ந்து மின்கம்பிகள் மீது உரசும் என்ற காரணத்துக்காக அந்த மரத்தை முழுவதுமாக வெட்டுவது எந்த விதத்திலும் நியாயமில்லை.
தமிழகத்தில் இந்த அளவுக்கு வெப்பம் அதிகரித்தற்கு நான்கு வழிச்சாலைக்காக பல்லாயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதும் ஒரு காரணம் என்பது மறுப்பதற்கில்லை. நான்கு வழிச்சாலைக்காக வெட்டப்பட்ட மரங்கள் இருந்த இடத்தில் மரக்கன்றுகள் வைத்து பராமரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவை சம்பந்தப்பட்டவர்கள் பின்பற்றினார்களா என்பது கேள்விகுறியே. கடந்த பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வரலாற்று பாடம் என்றாலேயே அனைவரது நினைவிலும் வருபவர் மன்னர் அசோகர்.
வகுப்பறையில் ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில் அசோகர் என்ன செய்தார் என்ற கேள்விகளை கேட்டால், அதற்கு மாணவர்கள் சாலையோரம் மரங்களை நட்டார் என வேடிக்கையாக பதில் சொல்வர். அப்போது நமக்கெல்லாம் வேடிக்கையாக தோன்றிய ஒரு விஷயம் இன்று இல்லாததால் நாம் படும் துயரம் எண்ணிலடங்காதது.
அன்று தொலைநோக்குப் பார்வையுடன் அசோகர் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டார். இதனால் மாதம் மும்மாரி மழை பொழிந்து விவசாயம் செழித்து மக்கள் வளமுடன் வாழ்ந்தனர். ஆனால் இன்று அவ்வாறு வைக்கப்பட்ட மரங்களை நாம் சாதாரணமாக அழித்ததன் பயனாக மழைவளம் குறைந்து நிலத்தடிநீர் மட்டம் அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டது.
அண்மையில் மறைந்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே தனது உயிலில் 'எனது இறப்புக்குப் பிறகு எனது நினைவாக நினைவு இல்லம், போட்டிகள், விருதுகள், சிலைகள் போன்றவற்றை அமைக்க வேண்டாம். எனது நினைவாக ஏதாவது செய்ய விரும்பினால் மரக்கன்றுகளை நட்டு அவற்றை பராமரியுங்கள். அதுவே எனக்கு மகிழ்ச்சியளிக்கும். ஆறுகளையும், அணைகளையும் பாதுகாக்க போதுமான முயற்சி எடுங்கள்' என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அவர் மரங்களின் அருமையை எந்தளவு உணர்ந்துள்ளார் என்பது புரியும். இதுபோன்ற செய்திகளை படிக்கும் நாமும் நம்மால் முடிந்தளவு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். இது நமது ஒவ்வொருவரின் கடைமை.
இல்லையெனில் நமக்குப் பின்னால் வரும் சந்ததியினர் தற்போது வாகனங்களில் நிரப்பும் எரிபொருள் போல தண்ணீரை ஒரு லிட்டர், 2 லிட்டர் அதிக விலைக்கு கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் நிலை ஏற்படும்.
தவிர்க்க முடியாத காரணங்களால் மரங்களை வெட்ட நேரிடும் போது மரங்களை வெட்டமால், அதனை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நடலாம். இதற்கு தேவையான ஏற்பாடுகளை அந்தந்த பகுதி மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கலாம்.
கார்பன் டை ஆக்ஸைடை உள்வாங்கிக் கொண்டு ஆக்சிஜனை மரங்கள் வெளியிடுகின்றன. இதனால் சுற்றுப்புறங்களில் அதிகஅளவில் மரங்கள் இருக்கும்பட்சத்தில் தற்போது வாகனங்களால் ஏற்பட்டு வரும் காற்று மாசும் குறையும். மனிதர்களின் ஆரோக்கியம் மேம்படும்.
காடுகளை அழிப்பதால் விலங்குகளுக்கு மட்டும் பாதிப்பில்லை. மனிதர்களுக்கும் தான். வளர்ந்து வரும் நாடுகளின் மிக முக்கியப் பிரச்னையாக இருப்பது காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்பு. காற்று மாசு கார்பன் டை ஆக்ஸைடு வாயுவாலும் இன்ன பிற வாயுக்களாலும் ஏற்படுகிறது. இந்த காற்று மாசை அதிக அளவிலான மரங்கள் இருந்தால் மட்டுமே குறைக்க முடியும்.
ஏனென்றால் மரங்கள் கார்பன்டை ஆக்ஸைடு வாயு மற்றும் பிற வாயுக்களை உள்வாங்கிக் கொள்கிறது. ஓராண்டு முழுவதும் நன்கு வளர்ந்த ஒரு ஏக்கர் பரப்பளவிலான மரங்கள், ஒரு கார் 26,000 மைல்கள் தூரம் ஓடி வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை உள்வாங்கிக் கொள்கின்றன.
அதாவது சுமார் 6 டன் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை எடுத்துக்கொண்டு 4 டன் ஆக்ஸிஜன் வெளியிடுகின்றன. இது 18 பேர் ஆண்டு முழுவதும் சுவாசிக்க போதுமான ஆக்ஸிஜன். ஒரு தனி மரமானது தனது வாழ்நாளில் சுமார் 250 கிலோ கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுகிறது.
பள்ளி வளாகங்களில் அதிக அளவிலான மரங்கள் நட்டு வளர்ப்பதன் மூலம் புறஊதா கதிர்களின் தாக்கத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் தோல் கேன்சரை 50 சதவீதம் வரை குறைக்க முடியும். ஒரு வீட்டைச் சுற்றி 3 மரங்கள் இருந்தால் கோடைகாலத்தில் வீட்டில் குளிரூட்டிகளின் பயன்பாடும் 50 சதவீதம் குறையும்.
வீட்டில் கொய்யா, மா, வாழை போன்ற பலன் தரும் மரங்களை வளர்த்தால் அது சிறிய அளவிலான வருமானத்துக்கு வழிவகுக்கும். வாழை மரத்தின் அனைத்துப் பாகங்களும் மக்களுக்கு பயன்படுகின்றன. பூ, இலை, காய், கனி, தண்டு, நார் பகுதி என எதுவுமே வீணாகாது.
இதுபோன்று பயன்களைத் தரக்கூடிய மரங்களை நாம் அழிக்காமல் பாதுகாத்து வளர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024