Friday, June 9, 2017


இயற்கை பானங்கள்

By எஸ். ரவீந்திரன்  |   Published on : 09th June 2017 03:22 AM 
பருவமழை பெய்ய வேண்டிய காலத்தில் வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. வெளியே தலை காட்ட முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இன்னும் சில தினங்களில் வெயிலின் தாக்கம் குறையும் என கூறப்பட்டாலும் என்னவோ கோடை போலவே வெயில் சுடுகிறது.
உடல்நலனில் மிகுந்த அக்கறை செலுத்துமாறு மருத்துவர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர். சுத்தமான நீர் கிடைத்தால் மட்டுமே உடல் ஆரோக்கியத்தைப் பேணமுடியும். ஆனால் வெளிநாட்டு குளிர்பானங்களை குடித்து உடலைக் கெடுத்துக் கொள்கிறோம்.
உள்ளூரில் கிடைக்கும் இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்துவதில் பல நன்மைகள் இருக்கின்றன. இயற்கையோடு இயைந்த வாழ்வுக்கு நம்மைத் தயார்படுத்துவது முக்கியம்.
வெயிலைச் சமாளிக்க இயற்கையாகக் கிடைக்கும் இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, வெள்ளரி, பதநீர், எலுமிச்சைச் சாறு, கரும்புச் சாறு, பழச்சாறுகள் போன்ற மண் மணம் மாறாத பானங்களை அருந்தலாம்.
குளிர்பானங்களைப் பொருத்தவரை பெரும்பாலும் ரசாயனப் பொடியை நீரில் கலந்து தயாரிக்கின்றனர். ஆனால் இளநீர் அப்படி கிடையாது. இப்போது அதற்கும் வந்துவிட்டது வில்லங்கம்.
அண்மையில் நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் சாலையோரம் புதிதாக முளைத்த இயற்கைப் பான விற்பனையகங்களில் உணவுப் பொருள்கள் பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை நடத்தியபோது பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தது.
பனைமரத்திலிருந்து இறக்கப்படும் பதநீர் உடல் சூட்டைத் தணிக்க வல்லது. இந்த பதநீரை வியாபாரிகள் செயற்கையாகத் தயாரிப்பதுதான் அதிர்ச்சியளிக்க வைத்தது. ஒரு லிட்டர் தூய பதநீரில் பல லிட்டர் தண்ணீர் கலக்கப்படுகிறது. பின்னர் இக் கலவையில் சுண்ணாம்பு நீர், சாக்கரின் எனப்படும் இனிப்புச் சுவை மிகுந்த ரசாயனப் பொடி மற்றும் பதநீர் சுவைதரும் ஒருவித பொடி இவற்றைக் கலக்கும்போது இயற்கையாகக் கிடைக்கும் பதநீர்போலவே நிறம், மணம் கிடைக்கிறது.
இதை மக்களிடம் வியாபாரிகள் சகட்டுமேனிக்கு விற்பனை செய்துவருவது கண்டறியப்பட்டது. இதை கண்டறிந்த அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் யார் கேட்பார்கள்? பெரும்பாலும் பதநீரைப் பொருத்தவரை காலை நேரத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். வெயில் அதிகரிக்கும்போது அது (சுத்தமான பதநீராக இருந்தால்) கள்ளாக மாறிவிடும்.
ஆனால் இங்கு விற்கப்படும் பதநீர் அவ்வாறு மாறுவதில்லை, காரணம் கலப்படம். இது தவிர எலுமிச்சை, ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பழச்சாறுகளின் பெயரில் நறுமணப் பொடிகளை வாங்கி தண்ணீரில் கலந்து விற்கின்றனர். இது இயற்கைச் சாறு கிடையாது.
அத்துடன் இனிப்புச் சுவைக்காக சீனி, வெல்லம் என்று எதையும் சேர்க்காமல் ரசாயன இனிப்புபொடி பயன்படுத்தப்படுகிறது. இதை அருந்துவதால் வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்படுகின்றன.
இன்னும் சிலர் இயந்திரத்தைப் பயன்படுத்தி அதில் சோடா நீரை கலந்தும், வாயுக்களை கலந்தும் குளிர்பானங்களைத் தயாரித்து விற்கின்றனர். கலப்படம் செய்ய முடியாத பொருள்கள் இளநீர் போன்றவைதான்.
சில வகை வெள்ளரி ஒட்டு ரகத்தில் விளைகின்றன. இது பார்ப்பதற்கு நீளமாக இருக்கும். சுவை குறைவாக இருக்கும். தற்போது இவற்றின் வருகையும் அதிகமாக இருக்கிறது. இவை வெளிநாட்டு விதைகள் மூலம் விளைவிக்கப்படுகிறது.
மேலும் தர்ப்பூசணி, கிர்னிப்பழம், வெள்ளரிப்பழம் போன்றவை கலப்படமில்லாமல் வாங்கி சாப்பிட ஏற்றவை. பிற பழங்களை கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும், எலுமிச்சை போன்றவற்றை நிறைய வாங்கி பயன்படுத்தலாம்.
பழங்களை வாங்கி வீட்டிலேயே பழச்சாறு தயாரித்து அருந்துவதே சிறந்தது. குழந்தைகளுக்கு வெளிநாட்டு குளிர்பானங்களை வாங்கித் தராமல் இயற்கையின் கொடையான பானங்கள், பழங்களை வாங்கி கொடுக்க வேண்டும்.
இப்படி செய்தால் உடல் ஆரோக்கியம் சிறக்கும், மருத்துவர்களை நாடிச் செல்ல வேண்டாம். தற்போது இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பழங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதற்காகவே பல விற்பனையகங்கள் வந்துள்ளன. இங்கு தரமான சத்து நிறைந்த பழவகைகள் கிடைக்கின்றன.
தவிர சிறுதானியங்களும் குளிர்ச்சியைத் தரும் என்பதால் அவற்றை பயன்படுத்தலாம்.தண்ணீரைப் பொருத்தவரையில் குளிர்ந்த நீரை அருந்துவது சளித்தொந்தரவு தரும். எனவே நீரை கொதிக்கவைத்து ஆறவைத்து பருகலாம். அதில் சோம்பு கலந்தும் பயன்படுத்தலாம்.
இதுபோன்ற இயற்கைப் பொருள்களை பயன்படுத்துவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதுடன் நோய்கள் நெருங்காமலும் பார்த்துக் கொள்ளலாம்.
நீரை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்கின்றனர். அதை தவிர்ப்பது நல்லது. ரயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட நீர் லிட்டர் ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அது போன்றவற்றையும் வாங்கி அருந்தலாம்.
பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்களை வாங்கும்போது தேதியைப் பார்த்துவாங்கவும். பல இடங்களில் காலாவதியான பாட்டில்களை விற்பனை செய்கின்றனர். எனவே வெப்பத்தைத் தணிப்பதற்காக அதிக செலவழித்து நோயை விலைக்கு வாங்க வேண்டாம்.
எளிய வகை பானங்களே போதுமானது. வெளியூர் பயணம் செய்யும்போதும், குழந்தைகளுடன் வெளியிடங்களுக்குச் செல்லும்போதும் முடிந்தவரை கடைகளில் விற்கப்படும் ரசாயன கலப்பு குளிர்பானங்களைத் தவிர்ப்பதே சிறந்தது. முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் ஆபத்துகளில் இருந்து விடுபடலாம். அலட்சியமாக இருந்தால் வீண் செலவுதான் ஏற்படும்.

    No comments:

    Post a Comment

    NEWS TODAY 21.12.2024