Wednesday, July 5, 2017

திருநங்கைகளுக்கு அனைத்துப் படிப்புகளையும் இலவசமாக வழங்கும் இக்னோ

By DIN  |   Published on : 04th July 2017 05:36 PM 
ignou

புது தில்லி: இந்தியாவின் புகழ்பெற்ற திறந்தநிலை பல்கலைக்கழகமாக விளங்கும் இக்னோவில், திருநங்கைகளுக்கு அனைத்துப் படிப்புகளையும் இலவசமாகப் பயிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருநங்கைகள், தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து, இக்னோவில் வழங்கப்படும் எந்த படிப்பிலும் இலவசமாக சேர்ந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 29ம் தேதி பல்கலைக்கழக பதிவாளர் கையெழுத்திட்டு வெளியான அறிக்கையில், 'பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் எந்த ஒரு படிப்புக்கும், திருநங்கைகள், கல்விக் கட்டணம் இன்றி சேர்த்துக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. திருநங்கைகளின் சேர்க்கையின் போது, மத்திய /மாநில அரசால் வழங்கப்பட்ட சான்றிதழ் / மருத்துவர் அளித்த சான்றிதழ் / அரசு அதிகாரியால் வழங்கப்பட்ட சான்றிதழ் / ஆதார் அட்டை, இன்னபிற அடையாள அட்டையை பல்கலையில் அளிக்கலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பின் மூலமாக ஏராளமான திருநங்கைகள் பட்டப்படிப்பு பயில முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறிய துணை வேந்தர் ரவீந்திர குமார், ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட திருநங்கைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.


2014ம் ஆண்டு மூன்றாம் பாலினத்தவராக உச்ச நீதிமன்றம் அறிவிக்கும் முன்பே, இக்னோ பல்கலைக்கழகம் தனது விண்ணப்பத்தில் 3ம் பாலினத்தவர் என்ற வாய்ப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024