சென்னை விமான நிலையத்தில் அதிரடி சோதனை 1 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் சிக்கியது: தம்பதி உள்பட 4 பேர் கைது
2017-08-03@ 05:50:36
dinakaran
சென்னை: சென்னை விமான நிலையத்தில் நேற்று அடுத்தடுத்து நடந்த அதிரடி சோதனையில் ரூ.1 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த சங்கர் அருணகிரி(42) மற்றும் அவரது மனைவி வனிதா(35) ஆகியோரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சங்கர் அருணகிரி ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்த தங்க பிஸ்கட்டுகளையும், வனிதா மறைத்து வைத்திருந்த நகைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து இருவதையும் கைது செய்தனர்.
தொடர்ந்து, அதிகாலை 4 மணிக்கு ரியாத்தில் இருந்து வந்த கல்ப் ஏர்லைன் விமானத்தில் இறங்கிய பயணிகளையும் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த ரபீஸ் அப்துல் ஷேக்(44) என்பவரை சோதனை செய்தபோது அவரது உடமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகப்பட்டு அவரை தீவிரமாக சோதனை செய்தபோது, காபி தயார் செய்யும் மிஷன் ஒன்றை வாங்கி வந்துள்ளார். அதை திறந்து பார்த்தபோது, அதற்குள் 13 தங்க பிஸ்கட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. 1.2 கிலோ எடையுள்ள தங்க பிஸ்கட்டுகளை பறிமுதல் செய்து, அப்துல் ஷேக்கை கைது செய்தனர்.
பின்னர் காலை 6மணிக்கு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த ரபீக் ஷேக்(30) என்பவர் கொண்டு மின்சார பம்புசெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1050 கிராம் எடையுள்ள 10 தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்தனர். ரபீக் ஷேக் கைது செய்யப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் நேற்று அடுத்தடுத்து நடந்த சோதனையில், ரூ.1 கோடி மதிப்புள்ள 3 கிலோ 300 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
No comments:
Post a Comment