Thursday, August 3, 2017

மாவட்ட செய்திகள்
சேலத்தில் பலத்த மழை: 30 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

சேலத்தில் பலத்த மழை: 30 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
 
சேலத்தில் பெய்த பலத்த மழையால் 30 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. ஏற்காடு மலைப்பாதையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலம்,

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையானது விவசாயிகளையும், பொதுமக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. எப்பவரும்... எப்பவரும்... என்று காத்திருந்த மக்களுக்கு இரவு சத்தமில்லாமல் கொட்டி தீர்த்தது மழை. ஏற்கனவே, வறண்டுபோன பூமிக்கு இந்த மழையானது உற்சாகத்தை அளித்தாற்போல, தன்னுள் உறிஞ்சிக்கொண்டது.
அதேவேளையில் தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்று வற்றிபோக மனமின்றி குட்டைபோல மழைநீர் காட்சி அளித்தது. அத்துடன் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளிலும் புகுந்து வெளியேற மறுத்தது.

அவர்களின் தூக்கத்தை கெடுத்து விடிய, விடிய விழிக்க செய்தது. சேலம் புதிய பஸ் நிலையம் முகப்பு பகுதியில் கொட்டி தீர்த்த மழை, பஸ் நிலையத்திற்கு சென்று வந்த பயணிகளின் ஆடைகளை நனைய செய்து விட்டது. அதாவது, பஸ் நிலையம் முன்புள்ள பகுதி, பள்ளப்பட்டி போலீஸ் நிலையம் முன்பு ஆகிய இடங்களில் மழைநீர் ரோட்டில் வெள்ளமென தேங்கி நின்றது. இதனால், அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டத்தை வெகுவாக குறைய செய்தது மழையின் தாக்கம்.

சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் அருகே வேடக்கவுண்டர் காலனி பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், வீட்டில் இருந்தவர்கள் வெளியேறமுடியாமல் தவித்தனர். இதன் காரணமாக நேற்று காலை அப்பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் பள்ளி செல்லமுடியவில்லை. சில வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர், புத்தகப்பையையும் நனைத்தது. மேலும் உடைமைகள், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களும் நனைந்து போனது.

அதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்கள் சற்றுமேடான பகுதிக்கு தங்களது உடைமைகளை எடுத்து கொண்டு புறப்பட்டனர். இதுபோல கிச்சிப்பாளையம் நாராயண நகரின் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. மழைநீரை சிலர், பாத்திரம் கொண்டு வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். கூலி வேலைக்கு செல்பவர்கள், நேற்று தங்களது வீடுகளை பராமரிக்கும் வேலையே சரியாக இருந்ததால், வெளிவேலைக்கு செல்லமுடியவில்லை. இதுபோல திருவாக்கவுண்டனூர் சுகுமார் காலனியில் 2-வது நாளாகவும் வீடுகளுக்குள் மழைநீருடன் சாக்கடை கழிவுநீரும் கலந்து புகுந்தது. இதனால், 2 நாட்களாக அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

சேலம் பிருந்தாவன் ரோட்டில் அழகாபுரம் போலீஸ் கட்டுப்பாட்டில் புறக்காவல் நிலைய கட்டிடம் உள்ளது. மழையால் முறிந்துபோன மரக்கிளை அதன்மீது விழுந்தது. அதை நேற்று மாலை வரை அப்புறப்படுத்த யாரும் முன்வராததால், குறுகிய சாலையில் வாகன ஓட்டிகள் செல்லும் நிலைக்கு ஆளானார்கள். இதனால், சிறிது நேரம் அங்கு வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இதுபோல சேலம் ஜங்சனில் இருந்து பழைய சூரமங்கலம் செல்லும் சுரங்கப்பாதையில் மழைநீர் குட்டைபோல தேங்கி நின்றது. இதனால், அவ்வழியாக பாதசாரிகள் மட்டுமின்றி இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் கூட செல்லமுடியவில்லை.

சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான தேர்வு நடந்து வருகிறது. நேற்று பெண் போலீஸ் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான உடல்தகுதி தேர்வு நடத்தப்பட்டது. பலத்த மழையால் ஆயுதப்படை மைதானத்தில் மழைநீர் தேங்கி நின்றது. அதை அப்புறப்படுத்திய பின்னரே தேர்வு தொடங்கியது. அதாவது வழக்கமாக காலை 6 மணிக்கு தொடங்கும் தேர்வு, நேற்று 1 மணி நேரம் தாமதமாக 7 மணிக்கு பின்னரே தொடங்கியது.

ஏற்காடு மலைப்பாதையில் பலத்த மழைக்கு சிறிய பாறைகள் உருண்டு விழுந்தன. ஏற்காடு அடிவாரத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள 40 அடி பாலம் அருகே, நேற்று அதிகாலை மலைப்பாதையில் பெரிய மரம் சாய்ந்து விழுந்தது. இதனால், சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல வழியின்றி ஸ்தம்பித்தது. சுற்றுலா பயணிகள் கடும் அவதிப்பட்டனர். தகவல் அறிந்து சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் சிவகுமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று, மலைப்பாதையில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 24 மணிநேரத்தில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பெத்தநாயக்கன்பாளையம்-96, சேலம்-64.8, ஓமலூர்-61, ஆத்தூர்-57.6, ஏற்காடு-38.8, வாழப்பாடி-32, அணைமேடு-31, கரியகோவில்-17, மேட்டூர்-9.1, காடையாம்பட்டி-9, எடப்பாடி-1.4
மாவட்டம் முழுவதும் பெய்த மழையில் பெத்தநாயக்கன்பாளையத்தில் மட்டும் அதிகபட்சமாக 96 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

No comments:

Post a Comment

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC New Delhi : 27.11.2024  Terming it a “scam”, Delhi High Court on Tue...