5 கி.மீ., அப்பாலே டாஸ்மாக் : வழிகாட்டுகிறது புதுக்கோட்டை
பதிவு செய்த நாள்07ஆக
2017
19:53
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில், டாஸ்மாக் கடையே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், குடிமகன்கள், மதுகுடிக்க, ஊருக்கு வெளியே, 15 கி.மீ., செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தொடர் போராட்டங்களால், இதை சாதித்துள்ள பெண்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள, 180 மதுக்கடைகளில், புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் மட்டும், 15 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன.
90 கடைகள் மூடல் : 'நாடு முழுவதும், மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி இயங்கி வரும் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்' என்ற உச்ச நீதிமன்ற உத்தரவின் பயனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்ட கடைகளில், 90 கடைகள் மூடப்பட்டன.
இதில், புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் செயல்பட்டு வந்த, 15 கடைகளில், 14 கடைகள் அடக்கம். அரிமளம் சாலையில், அன்னச்சத்திரம் பகுதியில் மட்டும் ஒரு மதுக்கடை, நகராட்சிக்கு எல்லைப்பகுதியில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், புதுகை நகரில் மூடப்பட்ட மதுபானக் கடைகளை, நகரைச் சுற்றியுள்ள, பல்வேறு ஊராட்சிகளில் திறக்க மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் தீவிர முயற்சி செய்தது. பெண்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக அவை பலன் அளிக்கவில்லை.
படையெடுப்பு : அன்னசத்திரம் பகுதியில், செயல்பட்ட ஒரே கடையை நோக்கி, நகரிலுள்ள குடிமகன்கள் படை எடுத்தனர். இதனால், அப்பகுதியே தினமும் திருவிழாக் கூட்டம் போல காட்சியளித்தது. குடிமகன்களால், பல்வேறு தொல்லைகளும் பொதுமக்களுக்கு ஏற்பட்டது.
இதனால், அந்த கடையையும் மூட வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளித்தும், நடவடிக்கை இல்லை. இதையடுத்து, பெண்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதன் பயனாக, ஜூலை 31ல் கடை மூடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கடையை தொடர்ந்து நடத்த, டாஸ்மாக் நிர்வாகம் முயன்றது. பெண்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கியதால், புதுக்கோட்டை நகரில் செயல்பட்டு வந்த ஒரு கடையும், 1ம் தேதியோடு மூடப்பட்டது. தற்போது புதுக்கோட்டை நகராட்சியில் மதுக்கடையே இல்லை.
கள்ள சந்தை : இதனால், புதுக்கோட்டை நகர குடிமகன்கள், மது குடிக்க, 15 கி.மீ., செல்ல வேண்டியுள்ளது. இது குடிமகன்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. பலர் அவ்வளவு துாரம் செல்ல வேண்டுமா என, மது குடிப்பதை தவிர்த்து வருகின்றனர். இது பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், புதுக்கோட்டை நகரில், கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்பது அதிகரித்துள்ளது. பலர் வெளியில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து, கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment