Tuesday, August 1, 2017

அனாதையாக கிடந்த 60 சவரன் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

பதிவு செய்த நாள் 31 ஜூலை
2017
22:06




கோவை: ரோட்டில் கிடந்த, 60 சவரன் நகைகளை மீட்டு கொடுத்த ஆட்டோ டிரைவரின் நேர்மையை, பலரும் பாராட்டினர். கோவை, பனைமரத்துாரைச் சேர்ந்தவர் முனியப்பன், 45; ஆட்டோ டிரைவர். நேற்று காலை, வழக்கம் போல், ஸ்டாண்டில் சவாரிக்காக காத்திருந்தார்.

அப்போது, ரோட்டில் ஒரு மஞ்சள் பை கிடந்தது. எடுத்து பார்த்த போது, உள்ளே, 20 தங்க நாணயங்கள், நகைகள் என, மொத்தம், 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 60 சவரன் நகைகள் இருந்தன.உடனடியாக, மற்ற டிரைவர்களுடன் இணைந்து, ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷன் சென்று, நகை பையை ஒப்படைத்தார். அப்போது, ஸ்டேஷனுக்கு போனில் ஒரு புகார் வந்தது.

அதில் பேசிய சாமிநாதன் என்பவர், 'அவசர தேவைக்காக, 60 சவரன் நகையை அடமானம் வைக்க, என் மேலாளர் பழனிசாமியிடம் கொடுத்து அனுப்பினேன். அவர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது நகையை தொலைத்து விட்டார்' என, தெரிவித்தார். சாமிநாதனை வரவழைத்து, விசாரித்த போது, அவர் தெரிவித்த நகைகளின் அடையாளங்கள் சரியாக இருந்தன.
இதையடுத்து, நகைகளை, அவரிடம் கமிஷனர் அமல்ராஜ் ஒப்படைத்தார்.

ஆட்டோ டிரைவர் முனியப்பனின் நேர்மையை பாராட்டி, போலீஸ் கமிஷனர் ரொக்க பரிசு வழங்கினார். சாமிநாதனும், ஆட்டோ டிரைவரை பாராட்டி, 10 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 10.01.2025