Tuesday, August 8, 2017



நீட்'தேர்வு விவகாரம் : சுருதி மாறும் தமிழக அரசு


''நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்குமா, கிடைக்காதா என, இந்த வாரத்திற்குள் முடிவு தெரிந்து விடும்,'' என, தமிழக சுகாதாரத்துறை செயலாளர், ராதாகிருஷ்ணன், கூறினார்.





மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான, 'நீட்' தேர்விலிருந்து, தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டுமென வலியுறுத்துவதற்காக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அடிக்கடி டில்லி வந்து செல்கிறார்.

தனி ஆர்வம்

நேற்று, மீண்டும் அவர் டில்லி வந்தார்.வட மாநிலங்களில் பிரசித்தி பெற்ற, ரக் ஷா பந்தன் பண்டிகை, நேற்று கொண்டாடப்பட்டதால், மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மத்திய அமைச்சர்கள் எவரும், அலுவலகங்களுக்கு வரவில்லை. ஆனாலும், டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வந்து தங்கியிருந்த அமைச்சர் விஜயபாஸ்கரை, காலையில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்தார்.
நீட் விவகாரம் தொடர்பாக, நிருபர்களுக்கு பேட்டியளிப்பதில், விஜயபாஸ்கரும், தம்பிதுரையும், எப்போதும் தனி ஆர்வம் காட்டுவது வழக்கம்.

மத்திய அமைச்சர்களை, இவர்கள் சந்திக்கும் புகைப்படங்களும், பத்திரிகையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

விலக்கு கிடைக்குமா

ஆனால், விஜயபாஸ்கர், நேற்று டில்லி வந்த தகவல் கூட, பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. நீட் தொடர்பான அமைச்சரின் டில்லிபயணங்கள் குறித்த, ஊடகங்களின் விமர்சனங்களே, இதற்கு காரணம் என தெரிகிறது.இந்நிலையில், சம்பந்தப்பட்ட அமைச்சரே, நேற்று டில்லியில் இருந்தும், வழக்கத்துக்கு மாறாக, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், நிருபர்களை சந்தித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது: நீட் விவகாரம் தொடர்பாக, 85 சதவீத ஒதுக்கீட்டை பெறுவதற்கான சட்டப்பூர்வமான மேல்முறையீட்டு நடவடிக்கைகள், தீவிரமாக நடக்கின்றன. எனவே, நீட் விவகாரத்தில், தமிழகத்துக்கு விலக்கு கிடைக்குமா, கிடைக்காதா என்பது, இந்த வாரத்துக்குள் தெரிந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுவரை, நீட் தொடர்பாக உறுதியாக போராடி வருவதாகவும், நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும் என, தமிழக அரசு கூறிவந்த நிலையில், தற்போது, மாநில அரசின் சுருதி மாறத் துவங்கியுள்ளது, கவனிக்கத்தக்கது.

கவுன்சிலிங் எப்போது?

நாடுமுழுவதும் உள்ள, அரசுமருத்துவக் கல்லுாரிகளில், 15 சதவீத, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தரப்பட்டுள்ளன. இதன்படி, 4,100 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கவுன்சிலிங், முடிந்தது.

இந்நிலையில், தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள, 5,774 மருத்துவ படிப்பு இடங்களுக்கான கவுன்சிலிங், எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு, மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு வழங்கிய, 85 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, இன்று விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது. அதில், சாதமாக தீர்ப்பு வந்தால், கவுன்சிலிங், ஓரிரு நாட்களில் துவங்கப்படும்.

அதேபோல், இந்தாண்டு, 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வரும், 31ம் தேதிக்குள் கவுன்சிலிங்கை முடிக்க வேண்டும். இதனால், இந்த வாரத்தில், முதற்கட்ட கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

-நமது டில்லி நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024