Tuesday, August 8, 2017

கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தினம் விடுமுறை எதிரொலி: ஆம்னி பஸ்களில் கட்டணம் கிடு, கிடு உயர்வு



கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தினம் விடுமுறை எதிரொலியாக ஆம்னி பஸ்களில் கட்டணம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆகஸ்ட் 08, 2017, 04:15 AM


சென்னை,

கிருஷ்ண ஜெயந்தி விழா வருகிற 14–ந் தேதியும் (திங்கட்கிழமை), சுதந்திர தின விழா 15–ந் தேதியும் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறையுடன், மேலும் 2 அரசு விடுமுறைகள் கிடைப்பதால் சென்னையில் தங்கி படித்து வரும் மாணவர்கள், வேலைபார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு சென்று வர முடிவு செய்துள்ளனர்.

இதனால் 11–ந் தேதி சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. காத்திருப்போர் பட்டியலும் நீண்டு காணப்படுகிறது.இதையடுத்து ஆம்னி பஸ் மூலம் பயணம் மேற்கொள்ளலாம் என்று நினைப்பவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கட்டணம் கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது. ஆம்னி பஸ்களின் டிக்கெட் முன்பதிவு இணையதளத்தில் கட்டண உயர்வு தெள்ளத்தெளிவாக இடம் பெற்றுள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வியாழக்கிழமை வரையிலான தேதிகளில் பயணிக்க ரூ.780 (ஏ.சி.) கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தொடர் விடுமுறை எதிரொலியால் 11–ந் தேதி முதல் 17–ந் தேதி வரையிலான தேதிகளில் பயணிக்க ரூ.1,600 கட்டணம் என்று அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பயணிகள் சிலர் கூறும்போது, ‘தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் ஆம்னி பஸ் கட்டணத்தை கண்காணிப்பது போன்று தற்போதும் கண்காணிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.ஆம்னி பஸ்கள் விவரம் இன்றைய பயண கட்டணம் 11–ந் தேதி பயண கட்டணம்

ஏ.சி. வசதி– ரூ.780 – ரூ.1,600

படுக்கை ஏ.சி.வசதி – ரூ.920 – ரூ.1,600

அதிவேக சொகுசு ஏ.சி. வசதி– ரூ.900 – ரூ.1,900

பென்ஸ் படுக்கை ஏ.சி.வசதி– ரூ.1,100 – ரூ.1,900

(இந்த கட்டணம் விவரம் குறிப்பிட்ட தனியார் ஆம்னி பஸ் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது)

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024