Sunday, August 6, 2017

வெங்கையா கடந்து வந்த பாதை....
பதிவு செய்த நாள்
ஆக 05,2017 20:05



வெங்கையா கடந்து வந்த பாதை

துணை ஜனாதிபதி தேர்தலில் 272 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெங்கையா நாயுடு, நாட்டின் 15-வது துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் தென்னிந்தியாவைச் சேர்ந்த 6வது துணை ஜனாதிபதி என்ற பெருமை பெற்றார்


பிறந்த தேதி: 1949 ஜூலை 1
வயது: 68
பிறந்த இடம்: நெல்லுார், ஆந்திரா
படிப்பு: பி.ஏ., பி.எல்.,
பெற்றோர்: ரங்கையா நாயுடு, ரமணம்மா
கட்சி: பா.ஜ.,

பார்லிமென்ட்டில் நீண்ட அனுபவம் மிக்க இவர் அனைத்து கட்சிகளின் அன்பை பெற்றவர். பிரச்னைகளை எளிதாக கையாளக்கூடியவர். இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ்.,சில் பணியாற்றினார். பின் ஆந்திர பல்கலையில் படிக்கும் போது, அகில் பாரதிய வித்யார்தி பரிஷத் இயக்கத்தில் ஈடுபட்டார். பேச்சாற்றல்மிக்க இவர், மாணவர் அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டார்.

சிறை சென்றவர்

1972ல் 'ஜெய் ஆந்திரா' இயக்கத்தில் பங்கேற்றவர். 1974ல் ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கத்தில் பங்கேற்றார். நெருக்கடி நிலையின் போது சிறைக்கு சென்றார். 1978ல் முதன்முறையாக ஆந்திர சட்டசபைக்கு தேர்வானார். 1983ல் மீண்டும் எம்.எல்.ஏ., வானார். 1985 - 88 வரை ஆந்திர மாநில பா.ஜ., பொதுச்செயலராக இருந்தார்.

1998ல் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி., ஆனார். 1988 - 93 வரை ஆந்திர பா.ஜ., தலைவராக இருந்தார். 2004 மற்றும் 2010ல் மீண்டும் ராஜ்யசபா எம்.பி., ஆனார். 1996 - 2000 வரை பா.ஜ., செய்தி தொடர்பாளராக இருந்தார். 1999ல் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். 2002ல் பா.ஜ., தேசிய தலைவரானார். 2004 லோக்சபா தேர்தலில் கட்சி தோல்விக்கு பொறுப்பேற்று அப்பதவியில் இருந்து விலகினார். 2014 மோடி அமைச்சரவையில் பார்லி விவகாரம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சரானார். 2016 மே 29ல் ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பி., ஆனார். 2016 ஜூலை 5ல் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சரானார்.

அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, மொரிஷியஸ், மாலத்தீவு, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளார்.

ஆக.11-ல் பதவியேற்கிறார்

வரும் 11-ம் தேதி காலை 11 மணிக்கு பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக வெங்கையாவின் சொந்த மாவட்டத்தில்அவரது உறவினர்கள் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

ஜனாதிபதி கரங்களை வலுப்படுத்துவேன்

துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கையா நாயுடு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, எனக்கு ஆதரவு அளித்த கட்சிகளுக்கு நன்றி. ஜனாதிபதி கரங்களை வலுப்படுத்த பாடுபடுவேன். ராஜ்யசபாவை நடத்தை நெறிமுறைகளை நிச்சயம் நிலைநாட்டுவேன் என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024