Saturday, August 5, 2017

”நாங்க இப்ப யாசகம் கேட்பதில்லை சாமி..” - காணாமல் போகும் பூம் பூம் மாடுகள்

திருஷ்டிகழிக்கும் பொருட்கள் தயாரிப்பில் | பழனியம்மாள்
‘நல்ல காலம் பொறக்குது.. நல்ல காலம் பொறக்குது..’ இப்படி நல்லதாய் நாலு வார்த்தை சொல்லும் பூம் பூம் மாட்டுக் காரர்களை இப்போதெல்லாம் பார்ப்பதே அரிதாகிவிட்டது. விசாரித்தால், “தொல்லை தாங்கமுடியல.. தொழிலை மாத்திக்கிட்டோம்” என்கிறார்கள்!
தொட்டி நாயக்கர் சமூகத்தின் ஒரு பிரிவினர்தான் பூம் பூம் மாடுகளை பிடித்தபடி வந்து நமக்கு நல்ல காலம் சொன்னவர்கள். திருச்சி காந்தி நகர் ஆதியன் குடியிருப்பின் அரசு தொகுப்பு வீடுகளில் சுமார் 150 குடும்பங்கள் தொட்டி நாயக்கர் சமூகத்தினர் வசிக்கின்றனர். மாடுகளை வளர்க்க தனி இடம், தீவனத்துக்காக ஆகும் செலவு, பராமரிப்புச் செலவு, மாடுகளை அலங்கரிக்கும் பொருட்களுக்கான செலவு உள்ளிட்ட காரணங்களாலும் தேவையற்ற விசாரணைகளுக்கு ஆளாக முடியாமலும் பூம் பூம் மாடுகளுக்கு குட்பை சொல்லிவிட்டார்கள் இவர்கள். திருஷ்டிகழிக்கும் பொருட்களை விற்பதுதான் இவர்களின் இப்போதைய தொழில்.
“என்ன இருந்தாலும், மாட்டைப் பிடிச்சுட்டுப் போயி நாலு வார்த்தை சொல்லி காசு கேக்குறது யாசகம் கேட்பது மாதிரித்தானே.. ஆனா, இப்ப நாங்க யாருக்கிட்டயும் யாசகம் கேட்கிறதில்ல சாமி.. இந்தப் பொருட்களை விற்று கவுரவமா வாழறோம். கடல் சங்கு, படிகாரம், வில்வக் காய், காடுகளில் விளையும் வெள்ளெருக்கு வேர், கம்பளி திரி இதையெல்லாம் தேடிப் பிடித்து வாங்கிவந்து மஞ்சள் தடவிய நூலில் கோர்த்து திருஷ்டிகழிக்கும் பொருட்களை தயாரிக்கிறோம். அவங்கவங்க வசதிக்கேற்ப எங்கக்கிட்ட 20 -லிருந்து 200 ரூபாய் வரைக்கும் திருஷ்டி பொருட்கள் இருக்கு. லாபம் பெருசா இல்லைன்னாலும் கவுரவமா பொழைக்க முடியுதே” என்று சொல்லும் பொன்னு, திருஷ்டி போக்கும் பொருட்களின் மகத்துவங்களை மளமளவென ஒப்பிக்கிறார்.
அவரைத் தொடர்ந்த பழனியம்மாள், “எங்கள்ல யாரும் சாதி மாறி கல்யாணம் செஞ்சுக்க முடியாது. அப்படி செஞ்சுக்கிட்டா அவங்கள நாங்க ஒதுக்கி வைச்சிருவோம். அவங்களோட யாராச்சும் தொடர்பு வெச்சா அவங்களயும் ஒதுக்கிருவோம். சம்பந்தப்பட்ட நபர் தப்பை உணர்ந்து மன்னிப்புக் கேட்டால், அவங்களுக்கு ஆயிரமோ ரெண்டாயிரமோ அபராதம் போடுவார் நாட்டார் (ஊர் தலைவர்). அபராதத் தொகையை கோயில் வரவுல சேர்த்துருவோம்” என்றவர், “முன்பு, யாசகம் கேட்ட நாங்கள் இப்ப, இந்தத் தொழிலைச் செய்யுறோம். எங்கள் பிள்ளைங்களுக்கு இதுவும் வேண்டாம். அவங்களாச்சும் படிச்சு முன்னுக்குவரணும். அதுக்காகத்தான் அவங்கள பள்ளிக்கூடத்துக்கு அனுப்புறோம்” என்று முடித்தார்.
பழமையில் ஊறிப்போன சம்பிரதாயங்கள்
என்னதான் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடந்தாலும், இந்த சமூகத்தில் சிறுவயது திருமணங்கள் இன்னமும் நடக்கத்தான் செய்கின்றன. நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தில் மாப்பிள்ளை வீட்டார் கருகமணி அணிவிக்கிறார்கள். கருகஅனி அணிந்த பெண், திருமணம் முடியும் வரை வேற்று ஆண்களுடன் பேசக்கூடாது. தங்களது இஷ்டதெய்வமான காளியம்மனை சாட்சியாக வைத்து, திருமணத்தை நடத்துகிறார்கள். மணப்பெண்ணுக்கு மணமகன் தங்க மூக்குத்தி, மோதிரம் உள்ளிட்ட பொருட்களை அன்பளிப்பாகக் கொடுத்து மனைவியாக ஏற்றுக் கொள்கிறார். குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டால் குலதெய்வக் குத்தமாகிவிடும் என்ற நம்பிக்கையும் இவர்களிடம் இருக்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024