Thursday, August 3, 2017

பெண் அரசு ஊழியர்கள் ஆண் பணியாளர்களுக்கு ராக்கி கயிறு கட்ட வேண்டுமாம்.. - ரக் ஷாபந்தன் கட்டாயமாக்கிய மத்திய அரசு

மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் வரும் டாமன், டையு யூனியன்பிரேதசங்களில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண் அரசு ஊழியர்கள், தங்களுடன் பணி புரியும் ஆண் பணியாளர்களுக்கு கண்டிப்பாக ராக்கி கயிறு கட்டி ‘ரக்‌ஷாபந்தன்’ பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

சகோதரத்துவத்தை விளக்கம் பண்டிகையாக, ரக்‌ஷாபந்தன் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, பெண்கள் தங்களின் சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறு கட்டு ஆசிபெறுவார்கள், ஆண்கள் அவர்களுக்கு பரிசுகள் அளிப்பார்கள்.

இந்துக்கள் மட்டுமல்லாது, சகோதரத்துவத்தை உணர்த்தும் அனைவரும் இதை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், யூனியன் பிரதேசமான டாம், டையுவில் ரக்‌ஷாபந்தன் பண்டிகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரசு அலுவலகங்களில் பணி புரியும் பெண்கள், தங்களுடன் பணியாற்றும் ஆண்களின் கைகளில் கண்டிப்பாக ராக்கி கயிறு கட்டி அவர்களை சகோதரர்களாக ஏற்க வேண்டும் என்று பணியாளர்துறை செயலாளர் குருபிரீத் சிங் கடந்த 1-ந்தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டாமன் டையு நிர்வாக அதிகாரி பிரபுல் கோதாபாய் படேல் உத்தரவின் பெயரில் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், அன்றைய தினம் பெண், ஆண் அரசு ஊழியர்கள் விடுமுறை எடுக்காமல் அலுவலகங்களுக்கு வர வேண்டும், வருகை பதிவேடு அறிக்கை மறுநாள் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து பெண் ஊழியர் ஒருவர் கூறுகையில், “ அரசின் சுற்றறிக்கை முட்டாள்தனமானது. பலரின் உணர்வுகள் அடங்கிய விஷயம் இது. ஒருவருக்கு ராக்கி கட்டலாம் , கட்ட வேண்டாம் என்பதை அரசு எப்படி முடிவு செய்ய முடியும்?. வேலை செய்யும் இடங்களில் நாங்கள் வேலைக்கான சூழலைத்தான் கடைபிடிக்க முடியும்’’ எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவையடுத்து, இந்த உத்தரவு பின்னர் வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபோது, ஆர்.எஸ்.எஸ். கட்சியின் தலைவர் மோகன் பகவத் கூறுகையில், “ ரக்‌ஷாபந்தன் பண்டிக்கைக்கு தேசிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்து கலாச்சாரமான இதை பாதுகாக்க நாடுமுழுவதும் கொண்டாடப்பட வேண்டும்’’ என்றார்.

கடந்த ஆண்டு மத்திய அரசின் இருக்கும் பெண் அமைச்சர்கள் எல்லைப்பகுதிக்கு சென்று ரக்‌ஷாபந்தன் கொண்டாடவும், அதற்கு முந்தைய ஆண்டு, தங்கள் தொகுதியில் சென்றுகொண்டாடவும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024