Monday, August 14, 2017


மருத்துவ படுகொலை
DINAKARAN

2017-08-14@ 00:08:52




உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அடுத்தடுத்து 63 குழந்தைகள் மரணமடைந்தது பெரும் துயரம். அதுவும் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அந்த மருத்துவமனையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய 48 மணி ேநரத்திற்குள் 30 பேர் இறந்துள்ளனர். அரசியல் ரீதியாகவும் ஆதித்யநாத்துக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ள இந்த மரணம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மருத்துவமனையின் முதல்வர் ராஜிவ் மிஸ்ரா பணி நீக்கம் செய்யப்பட்டார் என்கிறது அரசு. ‘‘இந்த துயர சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று நான் அதற்கு முன்பே ராஜினாமா செய்து விட்டேன். இதில் நான் பலிகடாவாக்கப்பட்டுள்ளேன் என்பது அவரது வாதம். ஆனால், முதல்வர் ஆதித்யநாத்தும் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன. தொடர் மரணங்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை இல்லாதது மட்டுமல்ல, என்செப்லாட்டிஸ் எனப்படும் மூளை வீக்கம் உள்பட பல காரணங்களால்தான் மரணங்கள் நிகழ்ந்துள்ளன என அரசு தரப்பில் தற்போது சப்ைப கட்டு கட்டப்படுகிறது. எதுவாக இருந்தாலும் நியாயமான விசாரணை நடத்தி கண்டுபிடித்து தீர்வு காணவேண்டியது அரசின் கடமை.

பிஆர்டி மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சிய போக்கு, மத்திய அரசின் தணிக்கை ஆய்விலும் கண்டறியப்பட்டு கடந்த ஜூன் மாதமே எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் 27.38 கோடி நிதி முறைகேடுகள் நடந்துள்ளன. அதோடு மெடிக்கல் கவுன்சில்(எம்சிஐ) வகுத்துள்ள விதிகள் அடிப்படையில்கூட போதிய உபகரணங்கள் இல்லை. குறிப்பாக மருத்துவ உபகரணங்கள்(கிளீனிக்கல் எக்யூப்மென்ட்ஸ்) 27.21 சதவீதமும், மருத்துவம் சாரா உபகரணங்கள் 56.33 சதவீதமும் பற்றாக்குறை இருப்பதாக தணிக்கை துறை ஆய்வு அம்பலப்படுத்தியுள்ளது.
உயிர் காக்கும் ஆக்சிஜன்வாயு சப்ளையும் மருத்துவம் சாரா உபகரண பட்டியலில் அடங்கியதுதான். தற்போது ஏற்பட்டுள்ள குழந்தைகள் மரணம் அதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் மீது திணிக்கப்பட்ட மரணம் ஒரு படுகொலை என நோபல் பரிசு பெற்ற சத்தியார்த்தி தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். அது உண்மையும் கூட.

நாட்டின் 71வது சுதந்திரத்தை கொண்டாடும் தருணத்தில் கோரக்பூர் மட்டுமல்ல, நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவமனைகளில் இதுபோன்ற அலட்சியங்களால் உயிரிழப்புகள் தொடர்வது வேதனை. அதோடு, குழந்தைகள் நலனில் நாம் இன்னும் ஏறவேண்டிய படிகள் ஏராளம்.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 37 சதவீதத்தினர் வளர்ச்சி குறைபாடு உடையவர்கள். 24 சதவீத குழந்தைகள் தங்கள் வயதுக்கேற்ற எடை இல்லாதவர்கள். 22 சதவீதத்தினர் ஊட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் என மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகமே ஒப்புகொண்டுள்ளது. பிறக்கும் சிசுக்களில் ஆயிரத்துக்கு 40 பேர் மரணிக்கின்றனர். இதையெல்லாம் மேலும் குறைப்பதற்குரிய அடிகளை எடுத்து வைக்காமல் இந்தியா வல்லரசு என மார் தட்டுவதில் அர்த்தமில்லை.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024