Saturday, August 5, 2017

தட்கல் டிக்கெட்டுகள்: ஆன் லைனில் புக் செய்து பிற்பாடு பணம் செலுத்தும் வசதி

தட்கல் ரயில் டிக்கெட்டுகளை தற்போது ஆன்லைனில் புக் செய்து பிற்பாடு பணம் கொடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
டிக்கெட்டுகளை வீட்டுக்கு வரவழைத்த பிறகு அதற்கான தொகையை கொடுக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இ-டிக்கெட் புக்கிங் சேவை வழங்கி வரும் நிறுவனமான ஆந்துரில் டெக்னாலஜிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய ரயில்வே நாளொன்றுக்கு 1,30,000 தட்கல் டிக்கெட்டுகளைக் கையாண்டு வருகிறது. இதில் பெரும்பாலான டிக்கெட்டுகள் கவுண்டர் திறக்கப்பட்ட சில நிமிடங்களில் புக் செய்யப்பட்டு விடுகின்றன.
தட்கல் டிக்கெட்டுகளை புக் செய்யும் போது அதற்கான தொகையைச் செலுத்தும் வழிமுறையில் காலதாமதம் ஏற்பட்டு டிக்கெட் இருந்தாலும் தொகை செலுத்துதலில் ஏற்படும் தாமதத்தினால் வெயிட்டிங் லிஸ்ட் ஆகிவிடும் நிலை நீடித்து வருகிறது.
தற்போது டிக்கெட் டெலிவரியின் போது தொகையைச் செலுத்தினால் போதும் என்ற திட்டத்தினால் புக்கிங் சில விநாடிகளில் நடைபெறுவதோடு உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தட்கல் புக் செய்யும் போது கட்டணத் தொகையைச் செலுத்துவதற்கான வங்கிச் சேவையை நாடும் தருணத்தில் இணையதள இணைப்பு கிடைப்பது தாமதமாவதால் டிக்கெட் புக் செய்யும் நடவடிக்கையே பயனற்று போவதும் நடைபெறுகிறது.
டிக்கெட்டுகளின் டிஜிட்டல் டெலிவரி குறுஞ்செய்தி அல்லது இ-மெயில் மூலம் நடந்து விடுகிறது, ஆனால் டிக்கெட்டுக்கான கட்டணத்தொகை வசூலிப்பது இவ்வகையில் 24 மணிநேரம் ஆகிறது.
மேலும் டிக்கெட் புக் செய்யும் போது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் பேமண்ட் லிங்க் மூலம் 4 மணி நேரத்துக்குள் டிக்கெட் கட்டணத் தொகையைச் செலுத்தினால் ரூ.50 கழிவு உண்டு.
டிக்கெட் டெலிவரிக்கு முன்னால் டிக்கெட்டை ரத்து செய்யும் வாடிக்கையாளர்கள் டிக்கெட் ரத்துக் கட்டணம் மற்றும் டெலிவரிக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இதற்கு மறுப்பு தெரிவித்தால் பயனாளர் கணக்கு துண்டிக்கப்பட்டு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
வாடிக்கையாளர்கள் ரிசர்வேஷன் கவுன்ட்டர்களை விடுத்து ஆன்லைன் வசதியைப் பயன்படுத்திக் கொள்வதை அதிகரிக்க ஐஎஸ்ஆர்டிசி இதனைச் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் இதற்காக ஐஎஸ்ஆர்டிசி-யின் ‘பே ஆன் டெலிவரி’ லிங்கில் பதிவு செய்து கொள்வது அவசியம்.
‘இ-பே லேட்டர்’
இதே போன்று ஐஎஸ்ஆர்டிசி ஆன்லைனில் இ-டிக்கெட் புக் செய்து 15 நாட்கள் கழித்து ‘இ-பே லேட்டர்’ வசதி மூலம் கட்டணம் செலுத்தும் முறையை சோதனை முயற்சியாக அறிமுகம் செய்துள்ளது. இந்த இ-பே லேட்டர் வசதியைப் பயன்படுத்தினால் 3.5% கூடுதல் கட்டணம் மற்றும் பொருந்தக்கூடிய வரியுடன் வசூலிக்கப்படும்.
வாடிக்கையாளர்கள் வசதிக்காக ஐஎஸ்ஆர்டிசி இணையதளப் பக்கத்தில் இந்த ‘இ-பே லேட்டர்’ லின்க் காணப்படும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024