சோழன் விரைவு ரயிலில் 50 சதவீத பெட்டிகள் முன்பதிவு இருக்கை பெட்டிகளாக மாற்றம்
சோழன் விரைவு ரயிலில் உள்ள தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் 50 சதவீத பெட்டிகள் வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் முன்பதிவு இருக்கை வசதி கொண்ட பெட்டிகளாக மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் - திருச்சி இடையே சோழன் விரைவு ரயில் (16853/54) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் உள்ள தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் 50 சதவீதப் பெட்டிகள் வரும் டிச.1-ம் தேதி முதல் முன்பதிவு இருக்கை வசதி கொண்ட பெட்டிகளாக மாற்றப்படுகிறது.
சபரிமலை சீசனை முன்னிட்டு சென்னை சென்ட்ரல்-கொல்லம் இடையே சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06045) வரும் 19-ம் தேதி முதல் 2018 ஜனவரி 21-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும். சென்ட்ரலில் இருந்து மதியம் 12.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் இந்த ரயில் (06046) வரும் 20, 27 மற்றும் டிச. 4,11,18 மற்றும் ஜன.8, 22-ம் தேதிகளில் இயக்கப்படும். இந்த ரயில் கொல்லத்தில் இருந்து மதியம் 2.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 8.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இதேபோல், சென்னை சென்ட்ரல்-கொல்லம் இடையே சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06051) வரும் 21-ம் தேதி முதல் 2018 ஜனவரி 16-ம் தேதி வரை வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து மாலை 6.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் இந்த ரயில் (06052) வரும் 22-ம் தேதி முதல் ஜனவரி 17-ம் தேதி வரை வாரம்தோறும் புதன்கிழமைகளில் இயக்கப்படும். கொல்லத்தில் இருந்து மாலை 4.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். மேற்கண்ட ரயில்களுக்கான முன்பதிவு இன்று (8-ம் தேதி) தொடங்குகிறது.
No comments:
Post a Comment