Wednesday, November 1, 2017

சென்னை புறநகரின் பல பகுதிகளில் பாதிப்பு சுரங்கப்பாதையில் மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து துண்டிப்பு



சென்னை புறநகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சுரங்கப்பாதையில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 01, 2017, 04:15 AM

ஆலந்தூர்,

சென்னை புறநகர் பகுதிகளான கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம் புழுதிவாக்கம், வேளச்சேரி, கீழ்க்கட்டளை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை பலத்த மழை கொட்டியது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது.

ஆலந்தூரில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி இருந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மடிப்பாக்கம்–புழுதிவாக்கம் ராம்நகர் வடக்கு பகுதியில் உள்ள 10–க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய்கள் சரியாக தூர்வாரப்படாததால் தண்ணீர் செல்ல வழியின்றி கழிவு நீருடன் தேக்கம் அடைந்துள்ளது.

ஒரே நாளில் பெய்த மழையிலேயே முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி இருப்பதால் மீண்டும் மழை பெய்தால் வீடுகளை விட்டு வெளியேறக்கூடிய நிலை ஏற்படும் என்ற அச்சத்தில் இருப்பதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து தண்ணீரை அகற்றி நிரந்தரமாக வடிகால்வாய்களை அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.

வேளச்சேரி பாரதி நகர், உதயம் நகர் போன்ற பகுதிகளிலும் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கி இருந்ததால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. கீழ்கட்டளை காசிவிஸ்வநாதபுரம் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. கோவிலம்பாக்கம் என்ஜீனியர்ஸ் அவென்யூ பகுதியில் உள்ள ஓடை தூர் வாரப்படாததால் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது.

கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் உள்ள சுரங்கப்பாதை வழியாக போரூர், வடபழனி போன்ற பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த சுரங்கப்பாதை மழைநீரினால் குளம்போல் நிரம்பியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்வோர் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மின்மோட்டார் மூலம் அங்கு இருக்கும் தண்ணீரை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் அகற்றப்படாததே மழைநீர் தேங்குவதற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினார்.

No comments:

Post a Comment

Techie plays cricket despite chest pain, dies of heart attack

Techie plays cricket despite chest pain, dies of heart attack  TIMES NEWS NETWORK 27.12.2024 Vijayawada : A 26-year-old software engineer di...