Wednesday, November 8, 2017

தலையங்கம்
நரேந்திரமோடியின் அரசியல் நாகரிகம்




‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் எப்போதும், பத்திரிகை நடத்துவது என்பது ‘நெருப்பு ஆற்றை நீந்திக்கடப்பது’ என்பார்.

நவம்பர் 08 2017, 03:00 AM

‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் எப்போதும், பத்திரிகை நடத்துவது என்பது ‘நெருப்பு ஆற்றை நீந்திக்கடப்பது’ என்பார். அந்த வகையில், பத்திரிகைகள் நடத்துவது என்பது எளிதான காரியமல்ல. தினத்தந்தி அத்தகைய நிலைமைகள் அனைத்தையும் தாண்டி 75 ஆண்டுகளை கடந்து பவளவிழா கொண்டாடியது. 17 பதிப்புகளையும், ஒரு கோடிக்கும்மேல் வாசகர்களையும் கொண்ட தினத்தந்தியின் பவளவிழாவிற்கு, பிரதமர் நரேந்திரமோடி அழைக்கப்பட்ட நேரத்தில் மிகவும் மகிழ்வோடு அதை ஏற்றுக்கொண்டார். சென்னையில் பெரும் மழைபெய்த நேரத்திலும், பிரதமர் நரேந்திரமோடி, இந்தவிழாவில் கலந்துகொண்டது நிச்சயமாக மிகவும் பெருமைக்குரியதாகும். பிரதமர் நரேந்திரமோடி விழாவில் மிகவும் உற்சாகத்தோடு கலந்துகொண்டார். விழாவில், தன்னுடைய உரையைத் தொடங்குவதற்கு முன்பு பிரதமர், தினத்தந்தி ஆண்டுதோறும் வழங்கும் இலக்கியப்பரிசை ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்புவுக்கும், மூத்த தமிழறிஞர் விருதை ஈரோடு தமிழன்பனுக்கும், சைக்கிளில் தினத்தந்தியை வினியோகம் செய்து, இன்று தொழில் அதிபராக உயர்ந்து இருக்கும் வி.ஜி.சந்தோசத்துக்கு சாதனையாளர் விருதும் வழங்கினார். தன் உரையை தொடங்கும்போதே, ‘சென்னை மற்றும் தமிழகத்தின் இதரபகுதிகளில் பெய்த பலத்தமழை மற்றும் வெள்ளத்தினால் தங்களின் அன்பான உறவினர்களை இழந்து கடும் இன்னல்களுக்கு ஆளாகிய குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறினார்.

‘காலையில் காபி, கையிலே தினத்தந்தி’ என்று எப்போதும் நடைமுறையில் இருக்கும் கூற்றைப்போல, தினத்தந்தியை படிக்க மக்கள் டீக்கடைகளில் மொய்த்ததைக்கூறி, இன்றும் அந்தப்பயணம் தொடர்கிறது. அரசியல் விழிப்புணர்வு, தகவல் பரிமாற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தியது. தினத்தந்தியின் நடுநிலையான செய்திகளால், சாதாரண கூலி தொழிலாளி முதல் அரசியல் பிரமுகர்கள் வரை பிரபலமாகி இன்றும் அந்தபயணம் தொடர்கிறது என்று புகழாரம் சூட்டினார். விழா நிறைவுபெற்றவுடன் பிரதமர் அப்படியே திரும்பிவிடவில்லை. விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த அனைவரையும் பார்க்கவேண்டும் என்ற உணர்வுடன், மேடையைவிட்டு இறங்கி பார்வையாளர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு வந்தார். அங்கே அனைத்துகட்சி தலைவர்கள், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருடன் மகிழ்வுடன் வணக்கங்களை பரிமாறிக்கொண்டார். இது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. இதுமட்டுமல்லாமல், உடல்நலக்குறைவால் இருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திக்க அவருடைய வீட்டிற்கே சென்றார். கருணாநிதி வீட்டிற்கு செல்வது அவருடைய அதிகாரபூர்வ சுற்றுப்பயணத்தில் இல்லை. தி.மு.க., பா.ஜ.க.வின் தோழமை கட்சியும் அல்ல. பா.ஜ.க. அரசை எதிர்த்து, தி.மு.க. இன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. இருந்தாலும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல், தனது எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியோடு தோழமை கொண்டுள்ள கட்சி தலைவர் என்று நினைக்காமல், உடல்நலம் குன்றியிருக்கும் ஒரு மூத்த தலைவரை சந்தித்து உடல்நலம் விசாரிக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் கருணாநிதி வீட்டிற்கு சென்று அவருடைய உடல்நலம் குறித்து விசாரித்தார்.

கருணாநிதியும் மிகவும் நெகிழ்ந்து, தான் எழுதிய ‘குறளோவியம்’ நூலின் ஆங்கிலப்பதிப்பும், ‘முரசொலி’ பவளவிழா மலரையும் மோடிக்கு பரிசாக வழங்கினார். ‘மோடியை, அழகாக இருக்கிறீர்கள்’ என்று கூறியிருக்கிறார். கருணாநிதியிடம், ‘உங்களுக்கு இப்போது ஓய்வுதேவை, என்வீட்டிற்கு வந்து ஓய்வு எடுங்கள்’ என்று மோடி அழைத்திருக்கிறார். கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாவையும் பார்த்தார். பிரதமர் மோடியின் இந்த அரசியல் நாகரிகம் எல்லோரையும் மிகவும் பாராட்டவைத்தது. அரசியலில் ஆயிரம் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அதையும் தாண்டி உள்ளார்ந்த நட்பு, பாசம் என்பது நிச்சயமாக அரசியல் உலகில் கடைப்பிடிக்கவேண்டிய ஒன்றாகும். டெல்லியில் அரசியல் கட்சி தலைவர்கள் இத்தகைய உணர்வுடன் பழகுவதைப்பார்த்து, தமிழ்நாட்டில் ஒருகாலத்தில் இருந்த இந்த அரசியல் நட்புணர்வு மீண்டும் தழைக்காதா? என்று எல்லோரும் விரும்பிக்கொண்டிருந்த நேரத்தில், பிரதமர் நரேந்திரமோடி நல்லதொரு அரசியல் நாகரிகத்தை தமிழ்நாட்டில் விதைத்துவிட்டு சென்றுவிட்டார். இந்த விதை தமிழ்நாட்டில் முளைத்து ஆலமரமாக வளரவேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024