Wednesday, November 8, 2017

சென்னை-புறநகர் பகுதிகளை மீண்டும் மிரட்டும் மழை தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை மழை மீண்டும் மிரட்ட தொடங்கி இருக்கிறது. நேற்று பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

நவம்பர் 08, 2017, 05:15 AM

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் கடந்த 2015-ம் ஆண்டை நினைவில் கொண்டு பீதியில் உறைந்து இருக்கின்றனர். அதற்கேற்றாற்போலவே, சென்னை புறநகர் பகுதிகளில் பல இடங்களில் ஒரு நாள் பெய்த மழையிலேயே குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்ததால் அந்த பகுதி பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. 5 நாட்களுக்கு பிறகு கடந்த 6-ந்தேதி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூரியன் தலை காட்டியது. பல இடங்களில் குளம்போல் தேங்கி இருந்த மழைநீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிய தொடங்கியது. தொடர் மழை காரணமாக சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள ஏரிகள் நிரம்பி வருகிறது. நிரம்பிய ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மீண்டும் மிரட்டிய மழை

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் மழை மிரட்ட தொடங்கியது. சென்னை எழும்பூர், புரசைவாக்கம், மூலக்கடை, மாதவரம், பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஓட்டேரி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி, கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம், ராயபுரம், தரமணி, திருவான்மியூர் உள்பட பல இடங்களில் நேற்று லேசான மழை பெய்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும், பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கியதாலும் கடந்த ஒரு வாரமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. ஒரு வாரத்துக்கு பிறகு நேற்று தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் காலையில் இருந்து மழை பெய்ததால் பல இடங்களில் பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை மழையில் நனைந்துவிடாமல் பாதுகாப்புடன் பள்ளிக்கு அழைத்து சென்றதை பார்க்க முடிந்தது. அதேபோல், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகவும் சிரமத்துடன் மழையில் நனைந்தபடி சென்றனர்.

இன்று இடியுடன் மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) இடைவெளி விட்டு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிப்பவர்களை இந்த தொடர் மழை மிரட்டுகிறது. அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கினால் அதை அகற்றுவதற்காக தயார் நிலையில் உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024