Sunday, November 12, 2017

ஒரு சில மருத்துவர்களின் தவறுகளுக்காக மருத்துவத் துறையையே குறை கூறக்கூடாது: கவிஞர் வைரமுத்து


By சென்னை,  |   Published on : 12th November 2017 02:35 AM  |
vairamuthu

ஒரு சில மருத்துவர்களின் தவறுகளுக்காக, மருத்துவத் துறையின் மீதே குறை கூறுவது ஏற்புடையதல்ல என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.
டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் சிகிச்சை மையம் சார்பில் சர்க்கரை நோய்க்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் சிகிச்சை மையத் தலைவர் டாக்டர் வி.மோகன் தலைமை தாங்கினார். டாக்டர் ரஞ்சித் உன்னிகிருஷ்ணன் வரவேற்றார். டாக்டர் அஞ்சனா முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று கவிஞர் வைரமுத்து பேசிது:
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டின் மனிதவளத்தைப் பொருத்தே கணிக்கப்படுகிறது. வளர்ந்து வரும் நம் நாட்டில் 11 பேருக்கு ஒருவர் வீதம் 6.80 கோடி பேர் சர்க்கரை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உடலின் சமநிலை சீர்கேட்டினால் ஏற்படும் இந்த சர்க்கரை குறைபாட்டை உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்து ஆகியவற்றின் மூலம் கட்டுப்படுத்தலாம்.
தற்போது, மருத்துவத் துறை மீது ஒரு தவறான பிம்பம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஒரு சில மருத்துவர்கள் செய்யும் தவறுகளுக்காக, ஒட்டுமொத்த மருத்துவத் துறையையே குறை கூறுவது ஏற்புடையதல்ல என்றார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசியது: சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் தனியார் அமைப்புகளுடன் இணைந்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொற்று நோய்த் தடுப்பில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது.
அண்மையில் குழந்தைகளுக்கு நோய்த் தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக அரசு முன்னெடுத்தது. ஆனால், அந்த தடுப்பூசி குறித்து இணையதளத்தில் தவறான தகவல் பரப்பப்பட்டதால் அத்திட்டமே முடங்கும் நிலை ஏற்பட்டது. பின்னர், பல லட்சம் ரூபாய் விளம்பரத்துக்காகச் செலவு செய்து அந்த தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்பக் கூடாது என்றார்.
முன்னதாக, சர்க்கரை நோய் உறுதிமொழிக்கான இணையதளத்தை கவிஞர் வைரமுத்து தொடங்கி வைத்தார். இதில், நடிகர்கள் எஸ்.வி.சேகர், கௌதமி, பாடகி சுஜாதா மேனன், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல், ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024