Tuesday, December 26, 2017

ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு: பணமா, பொருளா?

ரேஷன் கடைகளில், பொங்கலை முன்னிட்டு, தலா, ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரையுடன், 100 ரூபாய் ரொக்கம் அல்லது முந்திரி, திராட்சை, ஏலம் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக, அரசு ஆலோசித்து வருகிறது.





தமிழக ரேஷன் கடைகளில், 2017 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தலா, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை; தலா, 20 கிராம் முந்திரி, திராட்சை; ஐந்து கிராம் ஏலம்; இரண்டு அடி கரும்பு துண்டு ஆகியவை வழங்கப்பட்டன. இவை, அரிசி கார்டுதாரர், காவலர்கள், முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள் என, 1.80 கோடி ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்பட்டன. இதற்காக, தமிழக அரசு, 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

பணமா, பொருளா?

இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தி.மு.க.,ஆட்சியில், பொங்கலுக்கு, பச்சரிசி, வெல்லம், ஏலம், முந்திரி, திராட்சை ஆகியவை அடங்கிய, பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. பின், முதல்வரான ஜெயலலிதா, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இரண்டு அடி கரும்பு மற்றும், 100 ரூபாய் ரொக்கம் வழங்கினார். அவர் மறைவால், ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார்.

அந்த சமயத்தில், செல்லாத நோட்டு அறிவிப்பால், 100 ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடும் நிலவியது. ஏற்கனவே, அரசும், நிதி நெருக்கடியில் இருந்ததால், இந்த ஆண்டு பொங்கலுக்கு, பச்சரிசி, சர்க்கரை உடன், 100ரூபாய் ரொக்கத்திற்கு பதில், முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு துண்டு வழங்கப்பட்டன.

ஒரு வாரத்திற்குள் இறுதி முடிவு

வரும் பொங்கலுக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதில், 100 ரூபாய்

ரொக்கமா அல்லது பரிசு பொருட்களா என்பது குறித்து, நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், 100 ரூபாய்க்கு பதில், ஏற்கனவே வழங்கியது போல்,

முந்திரி, திராட்சை, ஏலம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கவே வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக, ஒரு வாரத்திற்குள் இறுதி முடிவு எடுத்து, அரசிடம் ஒப்புதல் பெறப்படும். அப்போது தான், ஜனவரி துவங்கியதும், 10 நாட்களுக்குள் அனைவருக்கும் வினியோகிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024