Tuesday, December 26, 2017

தினகரனின் தில்லுமுல்லு வெற்றி குறித்து விசாரணை!

சென்னை : ''ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தினகரன் செய்த தில்லுமுல்லு குறித்து, விரிவான விசாரணை நடத்தும்படி, தேர்தல் கமிஷனில், புகார் அளிக்க உள்ளோம். கட்சிக்கு துரோகம் செய்தவர்கள், கட்சி சட்ட விதிகளை மதிக்காமல் நடந்தவர்கள் மீது, உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, முதல்வர், பழனிசாமி, துணை முதல்வர், பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்தனர்.




சென்னை, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், முதல்வர் பழனிசாமி அளித்த பேட்டி: இடைத்தேர்தலை பொறுத்தவரை, மக்களை அணுகி தினகரன் வெற்றி பெறவில்லை. பல்வேறு தில்லுமுல்லு செய்து, வெற்றி பெற்றுள்ளார்.

அ.தி.மு.க.,விற்கு துரோகம்

தினகரனும், தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலினும், கூட்டு சதி செய்து, இரட்டை இலையை தோற்கடித்துள்ளனர். 'தனக்கு, ஒரு கண் போனாலும் பரவாயில்லை; எதிரிக்கு, இரண்டு கண்ணும் போக வேண்டும்' என, ஸ்டாலின் நினைத்தார். ஆனால், அவருக்கு, இரண்டு கண்களும் போய் விட்டன.

தினகரன் பின்னால் இருக்கும் நிர்வாகிகள் மட்டுமின்றி, அ.தி.மு.க.,விற்கு துரோகம் செய்த அனைவர் மீதும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இது, அ.தி.மு.க.,விற்கு தோல்வி அல்ல. தினகரன் தில்லுமுல்லு செய்து, மாயாஜாலம் செய்து, வெற்றி பெற்றுள்ளார்.தேர்தல் நேரத்தில், ஜெ., சிகிச்சை வீடியோவை வெளியிட்டனர். உண்மையான அ.தி.மு.க., தொண்டர் எவரும், இப்படிப்பட்ட வீடியோவை வெளியிட மாட்டார். ஜெ., மீது பாசமும்,விசுவாசமும் இருந்திருந்தால், இந்த காரியத்தை செய்திருக்க மாட்டார். நாங்கள், ஜனநாயக முறைப்படி தேர்தலை சந்தித்தோம்.

ஆட்சி கலைந்து விடும்

ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, இடைத்தேர்தலை எப்போதும் சந்தித்தது இல்லை.
ஒவ்வொரு முறையும், 'ஆட்சி கலைந்து விடும்' என, தினகரன் கூறுகிறார். பிப்., 16ல், ஆட்சி பொறுப்பேற்றோம். 11 மாதங்களாக, மக்கள் விரும்புகிற ஆட்சியை தந்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

துணை முதல்வர், பன்னீர்செல்வம் கூறியதாவது: தேர்தலில் நடந்த தில்லுமுல்லு குறித்து, தகுந்த விசாரணை நடத்த வேண்டும் என, தேர்தல் கமிஷனில், புகார் அளிக்க உள்ளோம். 'பிரசாரம் முடிந்ததும், வெளியூர் நபர்கள் வெளியேற வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. தினகரன் ஆதரவாளர்கள் வெளியேறாமல், 20 ரூபாய் நோட்டு கொடுத்து, 10 ஆயிரம் தருவதாகக் கூறியுள்ளனர். தற்போது, அவர்களை மக்கள் தேடி வருகின்றனர்.

தினகரன் பேசுவதெல்லாம் பொய்

இது குறித்து, தேர்தல் கமிஷன் விசாரிக்க வேண்டும்.தேர்தலில், நாங்கள் பணம் கொடுக்கவில்லை. தினகரனை, எனக்கு நன்றாக தெரியும்.

அவர் ஒரு மாயமான். அவரை நம்பி போனவர்களுக்கு, ராமாயணத்தில் ஏற்பட்ட நிலை தான் ஏற்படும்.

எங்கள் பக்கம் இருப்போர் அனைவரும், புடம்போட்ட தங்கங்கள். இன்றைய சூழ்நிலையில், ஒருவர் கூட அங்கு செல்லவில்லை. தினகரன் பேசுவதெல்லாம் பொய். 'பன்னீர்செல்வத்தை, நான் தான் அரசியலில் அறிமுகப்படுத்தினேன்' என, கூறினார்.

அவர் பெரியகுளத்திற்கு, 1998ல் வந்தார். நான், 1980ல் இருந்து அரசியலில் உள்ளேன்; அரசியலில், நான் சீனியர். ஜெ., மருத்துவமனையில் இருந்த போது, அவரை, அமைச்சர்கள் யாரும் சந்திக்கவில்லை. 'சந்திக்க வேண்டும்' என, கேட்டபோது, 'நோய் தொற்று ஏற்படும்' என கூறினர். 'நம்மால் நோய் தொற்று ஏற்படக் கூடாது' என்ற நல்லெண்ணத்தில், அமைதியாக இருந்தோம்.

ஜெ.,வை அமைச்சர்கள் பார்த்த, 'வீடியோ' இருந்தால், அதை வெளியிடலாம். ஜெ., சிகிச்சை பெற்ற காலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இருந்தால், விசாரணை கமிஷனில் கொடுப்பதை, யாரும் தடுக்கவில்லை. கட்சியிலிருந்து யாரும், தினகரன் பக்கம் செல்ல மாட்டார்கள். இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...