Thursday, December 7, 2017

நெல்லையிலும் கவர்னர் ஆய்வு : 'பார்மாலிட்டி' ஆனது பட்டமளிப்பு விழா

Added : டிச 07, 2017 00:02

திருநெல்வேலி: நெல்லை பல்கலை பட்டமளிப்பு விழாவிற்கு வந்த கவர்னர் புரோஹித், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ததோடு, பஸ் நிலையத்தில் துாய்மை பணியிலும் ஈடுபட்டார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், நேற்று மதியம், 1:00 மணிக்கு, 25வது பட்டமளிப்பு விழா நடந்தது. கவர்னர் புரோஹித் பங்கேற்று, 752 மாணவ - மாணவியருக்கு, பட்டங்களை நேரடியாக வழங்கினார். முன்னதாக, பல்கலை வளாகத்தில், 1 மெகாவாட் சோலார் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு, கவர்னர் அடிக்கல் நாட்டினார்.
விழா முடிந்து, 2:00 மணிக்கு புறப்பட்ட கவர்னர் புரோஹித், நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு, மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தில் நடந்த துப்புரவு பணிகளை பார்வையிட்டார். கவர்னர் வருகையை முன்னிட்டு, நடைபாதை கடைகள், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பஸ் நிலையம் பளிச் என இருந்தது. மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கவர்னரும், கைகளில் ரப்பர் உறைகளை மாட்டி, சுத்தம் செய்யும் பணியில்ஈடுபட்டார். பின், அவரே குப்பையை கையால் எடுத்து போட்டார். கலெக்டர் சந்தீப் நந்துாரி உள்ளிட்ட அதிகாரிகளும் குப்பை அள்ளினர்.

அங்கிருந்த மாநகராட்சி கமிஷனர் நாராயணன் நாயரிடம், 'குப்பையை போட மக்கும் குப்பை, மக்காத குப்பைக்கு தனித்தனியாக கூடைகள் வைத்துக் கொள்ள கூடாதா... ஒரு அதிகாரிக்கே தெரியவில்லை என்றால், நீங்கள் எப்படி சாதாரண மக்களுக்கு தெரிவிப்பீர்கள்...' என, கவர்னர் கேள்வி எழுப்பினார். பின், துாய்மை பாரத இயக்கத்தின் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். பஸ் ஸ்டாண்டில் நின்ற ஒரு மாணவியிடம் துண்டு பிரசுரத்தை கொடுத்து, சத்தமாக படிக்க சொன்னார். தொடர்ந்து, தெற்கு பஜார் பகுதியில், துாய்மைப் பணி விழிப்புணர்வு மேற்கொண்டார். பின், வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். சுற்றுலா மாளிகையில், 2:00 மணியில் இருந்து, பல்வேறு துறை அதிகாரிகள், பைல்களுடன் காத்திருத்தனர். இதில், சுகாதாரம் உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட முக்கிய துறை அதிகாரிகளுடன், கவர்னர் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆலோசனை நடத்தினார்.
மாலையில் மக்கள் பிரதி நிதிகள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், எளிய மக்களை சந்தித்து, குறைகளை கேட்டறிந்தார். இரவு, கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார்.


அ.தி.மு.க.,வினர் ஓட்டம் : வழக்கமாக பல்கலை பட்டமளிப்பு விழாக்களில், அமைச்சர்கள் பங்கேற்பதால், முதல் வரிசையை, அ.தி.மு.க.,வினர் ஆக்கிரமித்து கொள்வர். ஆனால், நேற்று ராஜ்யசபா, எம்.பி., விஜிலா தவிர அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் - எம்.பி.,க்கள் ஒருவர் கூட, பல்கலை பக்கமே எட்டிப்பார்க்கவில்லை.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...