Wednesday, December 13, 2017

மருத்துவ கல்வி இயக்குனர் நியமனம் ரத்து : பணிமூப்பின் படி பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

Added : டிச 13, 2017 00:58

மதுரை: மருத்துவக் கல்வி இயக்குனராக, எட்வின் ஜோவை நியமித்த, தமிழக அரசின் உத்தரவு மற்றும் அவருக்கு பதில், ரேவதியை நியமிக்கும் தனி நீதிபதியின் உத்தரவை, உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. 'தகுதி, திறமை, பணிமூப்பு அடிப்படையில் பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

கோவை அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக இருந்த, எட்வின் ஜோவை, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்து, ஏப்., 25ல், தமிழக சுகாதாரத் துறை அரசாணை வெளியிட்டது.
இதை எதிர்த்து, மதுரை, தபால் தந்தி நகர், ரேவதி, 'கரூர் மருத்துவக் கல்லுாரி டீனாக உள்ளேன்; பணிமூப்பு அடிப்படையில், மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க தகுதிகள் உள்ளன.
'எட்வின் ஜோவிற்கு தகுதிகள் இல்லை; அவரது நியமனத்தில் விதிமறல் உள்ளது. நியமன அரசாணையை ரத்து செய்ய வேண்டும். எனக்கு பதவி உயர்வு அளித்து, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மனு செய்தார்.
இதை விசாரித்த தனி நீதிபதி, 'எட்வின் ஜோவை, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்த அரசாணையை ரத்து செய்கிறேன். 


'மனுதாரருக்கு பதவி உயர்வு அளித்து, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும்' என, செப்., 20ல் உத்தரவிட்டார். 


இதை எதிர்த்து, சுகாதாரத் துறை முதன்மை செயலர் மற்றும் எட்வின் ஜோ மேல்முறையீடு செய்தனர்.


நீதிபதிகள், எம்.வேணுகோபால், அப்துல் குத்துாஸ் அமர்வு விசாரித்தது. இதற்கிடையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுாரி டீன், மீனாட்சிசுந்தரம், 'மருத்துவக் கல்லுாரி இயக்குனர் பதவி உயர்வில், என் பெயரையும் பரிசீலிக்க வேண்டும்.
'என்னையும், ஒரு எதிர் மனுதாரராக இணைத்துக் கொள்ள உத்தரவிட வேண்டும்' என, மனு செய்தார்.


நீதிபதிகள் உத்தரவு:


அரசின் நிர்வாக ரீதியான முடிவுகளில் தலையிட்டு, ஒருவருக்கு பதவி உயர்வு அளிப்பது தொடர்பாக, நீதிமன்றம் நேரடியாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. எட்வின் ஜோவை, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்த அரசாணையை ரத்து செய்கிறோம்.
ரேவதிக்கு பதவி உயர்வு அளித்து, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும் என்ற, தனி நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்கிறோம்.


எட்வின் ஜோ, ரேவதி, மீனாட்சிசுந்தரம் ஆகியோரின் தகுதி, திறமை, பணிமூப்பு அடிப்படையில், சட்டத்திற்கு உட்பட்டு, மறு பரிசீலனை செய்து, சுகாதாரத் துறை முதன்மை செயலர், ஆறு வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்; வழக்கை பைசல் செய்கிறோம்.
இவ்வாறு உத்தரவில் கூறினர்.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...