Sunday, December 17, 2017

ஆர்.கே.நகர்.. வேட்பாளர்களே தேர்தலில் கொஞ்சம் நேர்மை ப்ளீஸ்

! #RKNagarAtrocities

வெங்கட சேது.சி



“மாற்றம் என்பது நம் வீட்டில் இருந்து தொடங்க வேண்டும்” என்பார்கள். அது, சமுக மாற்றமானாலும், ஜனநாயக நெறிமுறைகளானாலும், லஞ்ச, லாவண்யத்திற்கு எதிரான நிலைப்பாடானாலும் சரி. “மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் இதுபோன்ற தீமைகளை எதிர்த்துப் போராட வேண்டும்” என்று பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் பேசியும் எழுதியும் வருகிறோம். ஆனால், இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகரில் தற்போது நடப்பது என்ன? கொஞ்சம் சிந்தியுங்களேன்.

ஒரு ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் என்று விலை பேசப்படுகிறது. ஒரு வீட்டில் வாக்களிக்கத் தகுதியுடையோர் ஐந்து பேர் என்றால், முப்பதாயிரம் ரூபாய் என்று கணக்கிட்டு ஆளும் தரப்பிலும், வேறு சிலரும் ஓட்டுக்கு பணம் வழங்குவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆர்.கே. நகர் தொகுதியைப் பொறுத்தவரை, தொழிலாளர்கள் அதிகளவில் வசிக்கும் பகுதி என்பதால், சாதாரணமாக சராசரி நபரின் மாத வருவாய் என்பது சுமார் 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் ரூபாய் வரை. இந்த நிலையைத்தான், அரசியல்கட்சிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, வாக்காளர்களுக்கு பணம் வழங்கி அவர்களின் ஓட்டுகளைப் பெற்று விடலாம் என்று நினைக்கின்றன. தொகுதிக்குட்பட்ட சில இடங்களில் பணம் மற்றும் அவற்றை வழங்குவது தொடர்பான ஆவணங்கள் அடங்கிய ஆதாரங்கள் வீடியோக்களாகவும், புகைப்படங்களாகவும் வெளியாகி இருப்பது தேர்தல் ஆணையத்தையும், அரசியல் நடுநிலையாளர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, பிரசாரம் நடைபெற்ற போது, ஒரு ஓட்டுக்கு நான்காயிரம் ரூபாய் டி.டி.வி. தினகரன் அணியினர் வழங்கியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, வாக்குப்பதிவுக்கு இரு நாள்கள் முன்பாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், அப்போது தினகரனுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும், இப்போது அவருக்கு எதிராக உள்ளனர். அரசு எந்திரம் தற்போது அவர்கள் பக்கம் உள்ளதால், சில இடங்களில் காவல்துறையினர் கண்டும் காணாமல் இருப்பதாக பரவலாகப் புகார் எழுந்துள்ளது.



ஏப்ரல் மாதத்தில் தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்கியவர்கள்தான் இப்போது, தினகரன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரட்டை இலை சின்னம் கிடைத்த பின்னர், ஒரு ஓட்டுக்கு கூடுதலாக இரண்டாயிரம் ரூபாய் அளிப்பதாகப் புகாரகள் வருகின்றன. ஒருசில இடங்களில் வாக்காளர்களின் பெயர்களுடன் கூடிய பேப்பர்களில் அவர்களுக்கான தொகை விவரம் குறிப்பிடப்பட்டு, பணம் வழங்கப்படுவதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் என்னதான் விழிப்புஉணர்வை ஏற்படுத்தினாலும், வாக்காளர்கள் “இது நம் வாக்கு, நம் உரிமை; எங்கள் வாக்குகளை விற்பனை செய்ய மாட்டோம்” என்ற உறுதியுடன் செயல்பட்டால் மட்டுமே பணப்பட்டுவாடாவைத் தடுக்க முடியும். தொகுதிக்கு சரியான பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய முடியும். ஒரு ஓட்டுக்கு இவ்வளவு பணம் என்று நிர்ணயித்து செலவிடும் வேட்பாளர், வெற்றிபெற்றால் அவரிடம் எப்படி தொகுதிக்கான நன்மைகளை எதிர்பார்க்க முடியும்? விட்டதைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், “எவ்வளவு செலவு செய்தோமே அதற்கு வட்டியும், முதலுமாக சம்பாதிக்க வேண்டும்" என்ற அடிப்படையிலேயே அந்த வேட்பாளர் எதிர்காலத்தில் செயல்படுவார் என்பதை அறிவார்ந்த மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

“ஜனநாயகம் பணநாயகமாக” மாறிக்கொண்டிருப்பது எதிர்கால சந்ததியினரின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல என்பதை மக்கள் உணர வேண்டும். அ.தி.மு.க., தி.மு.க. அல்லது தினகரன் என எந்தக் கட்சியானாலும், எந்த வேட்பாளரானாலும் வாக்குக்கு பணம் வழங்க முற்பட்டால், உடனடியாக அவர்கள் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க மக்கள் முன் வரவேண்டும். நமக்குத் தேவை தொகுதிக்கு முன்னேற்றம் அளிக்கக்கூடிய, தொகுதி மக்களின் பிரச்னைகளை சட்டசபையில் எடுத்துரைத்து, திட்டங்களைப் பெற்று செயல்படுத்தக்கூடிய நல்லதொரு பிரதிநிதியே தவிர, வியாபார நோக்குடன் பணம் வழங்கும் வியாபாரி அல்ல என்பதை ஒவ்வொரு வாக்காளரும் உணர வேண்டும்.

ஆனால், ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து அன்றாடம் வெளியாகும் கள நிலவரத் தகவல்களைப் பார்க்கும்போது, பணப் பட்டுவாடா பல்வேறு நிலைகளிலும் தொடர்வதாகத் தெரிய வருகிறது. ஒரு சில இடங்களில் காவல்துறை மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்குத் தெரியாமலும், வேறு சில இடங்களில் அதிகாரிகளுக்குத் தெரிந்தாலும், கண்டுகொள்ளாமலும் பணப்பட்டுவாடா நடைபெறுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஜனநாயகம் பற்றிய புரிதல் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்; பணம் வாங்கிக் கொண்டு நம் ஜனநாயகக் கடமையை மறந்து விட்டால், இனி எப்போதும் தொலைந்து விட்ட ஜனநாயகத்தை தேடிப் பிடிக்க முடியாத நிலை உருவாகும்.

மாற்றம் ஆர்.கே.நகர் தொகுதி மக்களிடம் இருந்து ஏற்படட்டும்... அதுவே எதிர்காலத்தில் ஜனநாயகம் தழைத்தோங்க வழிவகுக்கும்!

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...