Thursday, December 21, 2017

பெரியார் பல்கலை.யில் கோப்புகள் மாயம்: போலீஸார் விசாரணை தொடக்கம்

By DIN  |   Published on : 21st December 2017 01:22 AM  |

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2012 முதல் 2015 வரையிலான காலகட்டங்களில் நடைபெற்ற பணி நியமனங்கள் குறித்த கோப்புகள் காணாமல் போனது தொடர்பாக, சேலம் மாநகர குற்றப் பிரிவு போலீஸார் முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த தோப்புபாளையத்தைச் சேர்ந்தவர் அங்கமுத்து (57). இவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி இயக்குநராகப் பொறுப்பு வகித்து வந்தார். இவர் கடந்த 2012 முதல் 2015 வரை, முன்னாள் துணைவேந்தர்கள் முத்துச்செழியன், சுவாமிநாதன் ஆகியோரது பதவிக் காலத்தில் பதிவாளராகப் பதவி வகித்து வந்தார். 2015 -இல் பதிவாளர் பொறுப்பில் இருந்து விலகிய அங்கமுத்து, தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி இயக்குநராகப் பணிபுரிந்து வந்தார்.
இதனிடையே, 2012 முதல் 2015 வரையிலான காலகட்டங்களில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாதோர் பணி நியமனம் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனது. இதுதொடர்பாக அந்தக் காலகட்டத்தில் பதிவாளராகப் பதவி வகித்த அங்கமுத்து மீது புகார் எழுந்து, பல்வேறு கட்ட விசாரணையும் நடைபெற்றது.

இந்தநிலையில், பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் எம்.மணிவண்ணன், கடந்த டிசம்பர் 16 -ஆம் தேதி, சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கரிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், 2012 முதல் 2015 வரையிலான காலகட்டங்களில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் குறித்த கோப்புகள், ஆவணங்கள் காணாமல்போனது தொடர்பாக அப்போதைய பதிவாளராக இருந்த அங்கமுத்து உள்ளிட்ட நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது. புகாரை பெற்றுக் கொண்ட மாநகர காவல் ஆணையர் சங்கர், இந்தப் புகாரை மாநகரக் குற்றப் பிரிவு போலீஸில் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார். அதன்பேரில், அங்கமுத்து உள்ளிட்ட பல்கலைக்கழக நிர்வாகத்தினர் மீது திங்கள்கிழமை (டிச.18) வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தற்கொலை: இந்நிலையில், அங்கமுத்து மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட அதே நாளில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான தோப்புபாளையத்தில் விஷமருந்தி அவர் தற்கொலை செய்து கொண்டார்.

விசாரணை தொடக்கம்: இதனிடையே, பணிநியமனக் கோப்புகள் காணாமல்போனது தொடர்பான விசாரணையை மாநகரக் குற்றப் பிரிவு போலீஸார் தொடங்கியுள்ளனர். கடந்த 2012 முதல் 2015 வரையில், பதிவாளர் கையொப்பமிட்ட பணி நியமனக் கோப்புகள், ஆவணங்கள் மற்றும் ஆவணப் பதிவேடு விவரங்கள் தொடர்புடைய நிர்வாகப் பிரிவு அலுவலர்கள், பணியில் இருந்தவர்கள் குறித்த விவரங்களைத் தரும்படி பல்கலைக்கழகப் பதிவாளர் எம்.மணிவண்ணனிடம் போலீஸார் கேட்டுள்ளனர்.

தற்போது காலியாக உள்ள பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கு தேடல் குழுவால் தெரிவு செய்யப்பட்ட 10 பேரில், அங்கமுத்துவின் பெயரும் பரிசீலனைப் பட்டியலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...