Wednesday, December 20, 2017

பல்கலை பதிவாளர் மரணத்தில் அரசியல் பின்னணி
முறைகேடுகளின் புகலிடமானது உயர்கல்வி


உயர்கல்வியில் நடந்த முறைகேடுகளின் உச்சமாக, சேலம் பெரியார் பல்கலை பதிவாளர் தற்கொலை செய்துள்ளார். இதன் பின்னணியில் உள்ள அரசியல்வாதிகள், உயர்கல்வி அதிகாரிகளை விசாரித்து, வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.



சேலம் பெரியார் பல்கலை இணைப்பில், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள் என, 95 கல்லுாரிகள் செயல்படுகின்றன. அவற்றில், 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கல்லுாரிகளில் முதல்வர், பேராசிரியர், பணியாளர்கள் நியமனத்துக்கு, பல்கலையின் சிண்டிகேட் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும்.இந்நிலையில், பல்கலையின் உடற்கல்வி இயக்குனர், அங்கமுத்து, 2012 ஆக., முதல், 2015 வரை, பதிவாளராக இருந்த போது, பேராசிரியர்கள், பணியாளர்கள் பலர் நியமிக்கப்பட்டனர்.

அங்கமுத்து வீட்டில் சோதனை

இதில், முறைகேடுகள் நடந்துள்ளதாக, 2014ல் புகார் எழுந்தது. மேலும், தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கும், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கும், அதிக மதிப்பெண் வழங்கி, தேர்ச்சி பெற வைத்ததாகவும் புகார் கூறப்பட்டது.

இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், அங்கமுத்துவின் வீட்டில் நடத்திய சோதனையில், 'டம்மி' விடைத்தாள்கள் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதை தொடர்ந்து, பதிவாளர் அங்கமுத்துவின் பதவி காலத்தில் நடந்த, பணி நியமனங்கள் மற்றும் நிர்வாக பணிகள் குறித்து, பல்கலை நிர்வாகம், சிண்டிகேட் கமிட்டி உள்ளிட்டவை விசாரணையை துவக்கின. அப்போது, பணிநியமனம் தொடர்பான ஆவணங்கள் திடீரென மாயமாகின.

அங்கமுத்துவிடம், பல்கலை நிர்வாகம் விசாரித்தபோது, 'ஆவணங்கள் குறித்து, தனக்கு எதுவும் தெரியாது' என, கூறிவிட்டார்.

அங்கமுத்துவிடம் விசாரணை

அதேநேரம், பெரியார் பல்கலைக்கு, புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் பணிகள் துவங்கின. இந்த பதவிக்கு, அங்கமுத்துவும் விண்ணப்பித்தார். ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஸ்ரீதர் தலைமையிலான தேடல் குழுவின் பரிசீலனை பட்டியலில், அங்கமுத்துவின் பெயர் இடம் பெற்றிருந்ததாக, கடந்த வாரம் தகவல் வெளியானது.

இதற்கிடையில், ஆவணங்கள் மாயமானதுதொடர்பாக, சேலம், சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில், பல்கலை நிர்வாகம், அங்கமுத்து மீது புகார் அளித்தது. இதுகுறித்து, டிச., 16ல், அங்கமுத்துவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் மீது, எந்த நேரத்திலும் வழக்கு பதிவு செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின.

பணி நியமன முறைகேடு

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன், வீட்டில் விஷம் குடித்து, அங்கமுத்து தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம், உயர்கல்வித்துறையில் அதிர்ச்சியையும், நடுக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அங்கமுத்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு, அவரது பின்னணியில் இயங்கியவர்கள் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எனவே, பணி நியமன முறைகேடு பிரச்னைகளில், பின்னணியில் இருந்த பேராசிரியர்கள் உள்ளிட்ட உயர்கல்வித்துறையினர் யார், 2016 வரை, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் பதவியில் இருந்த போது, அங்கமுத்துவுக்கு பின்னணியில் இருந்த அரசியல்வாதிகள் யார் என்ற கேள்வி எழுகிறது.இதுகுறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது, கிரிமினல் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...