Wednesday, December 20, 2017

ஏர்டெல் நிறுவனம் மீதான புகார் காரணமாக, சமையல் எரிவாயு மானியம் வரவு வைக்கும் வங்கிகள், வாடிக்கையாளரின் ஒப்புதலை பெற்ற பிறகே, வேறு வங்கிக்கு மானியத்தை மாற்ற வேண்டும் என்று ஆதார் வழங்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
 
புதுடெல்லி,
அனைத்து வங்கி கணக்குகளுடனும், அனைத்து மொபைல் போன் எண்களுடனும் ‘ஆதார்’ எண் இணைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சமையல் எரிவாயு மானியம் உள்ளிட்ட மத்திய அரசின் மானியங்கள், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு வாயிலாகவே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
ஒரு நபர், தனது வங்கிக்கணக்கு ஒன்றில் மானியம் பெற்று வந்தபோதிலும், அவர் தனது மற்றொரு வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும்போது, அவரது சம்மதம் பெறாமலேயே, அவர் புதிதாக இணைத்த வங்கிக்கணக்குக்கு மானியம் மாற்றப்பட்டு விடுகிறது.

இதே பாணியில், பார்தி ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம், தனது வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண்ணை பெற்றபோது, அவர்களுக்கு தெரியாமலேயே தனது ஏர்டெல் பேமண்ட் வங்கியில் அவர்களது பெயரில் கணக்கு தொடங்கியதாகவும், அந்த கணக்குகளில் மானியத்தை வரவு வைத்ததாகவும் தெரிய வந்துள்ளது.
லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் கணக்குகளில் மொத்தம் ரூ.190 கோடியை வரவு வைத்துள்ளது. இதை அறிந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அந்த மானிய தொகையை வாடிக்கையாளர்கள் ஏற்கனவே மானியம் பெற்று வந்த வங்கிக்கணக்குக்கு மாற்றுமாறு உத்தரவிட்டன. ஏர்டெல் நிறுவனமும் அதை ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்நிலையில், இதுபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படாதிருக்க ஆதார் எண் வழங்கும் ‘இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம்’ நேற்று புதிய ஆணை ஒன்றை அரசிதழில் வெளியிட்டது.

அதில், வாடிக்கையாளர்கள் ஏற்கனவே மானியம் பெற்று வரும் வங்கிக்கணக்கில் இருந்து வேறு வங்கிக்கணக்குக்கு மானிய வரவை மாற்றுவதாக இருந்தால், வாடிக்கையாளர்களின் வெளிப்படையான ஒப்புதலை பெற்ற பிறகே அப்படிச் செய்யவேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

வங்கிகள் இதுபோன்ற மாற்றத்தை செய்வதற்கு முன்பு, 24 மணி நேரத்துக்குள், வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். அல்லது இ–மெயில் அனுப்பி, அவர்களது ஒப்புதலை பெற வேண்டும். இந்த வசதி இல்லாத வாடிக்கையாளர்களிடம், ஒரு படிவத்தை நிரப்பச்செய்து ஒப்புதல் பெற வேண்டும்.

தணிக்கையின்போது காண்பிப்பதற்காக, இந்த ஆவணங்களை வங்கிகள் 7 ஆண்டுகளுக்கு தங்கள் கைவசம் பத்திரமாக பராமரித்து வரவேண்டும். இந்த ஒப்புதல் இருந்தால்தான், தேசிய பணப்பட்டுவாடா கழகம், வேறு வங்கிக்கணக்குக்கு மானியத்தை மாற்ற வேண்டும். மானியம் வரவு வைக்க வேண்டிய வங்கிக்கணக்கை வாடிக்கையாளர்களே மாற்ற விரும்பினால், அதற்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
‘‘‘வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்காமல், மானியம் வரவு வைக்க வேண்டிய வங்கிக்கணக்கை மாற்றுவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்த பாதுகாப்பான நடைமுறை கொண்டுவரப்படுகிறது’’ என்று இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணைய தலைமை செயல் அதிகாரி அஜய் பூ‌ஷண் பாண்டே தெரிவித்தார்.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...