Sunday, December 24, 2017

R.K. Nagar Election

 ஆர்.கே.நகர் ,இடைத்தேர்தலில் ,வெற்றி ,பெறப்போவது, யார்?
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், வெற்றி பெறப் போவது யார் என்பது, இன்று காலை தெரிய வரும். தினகரன் காசு கொடுத்து வாங்கிய, 'குக்கர்' விசிலடிக்குமா என்ற எதிர்பார்ப்பு, அவரது ஆதரவாளர்களிடம் காணப்படுகிறது. ஆளுங்கட்சியினரோ, 'இரட்டை இலை சாதிக்கும்' என்ற, அதீத நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். இவர்களுக்கு இடையில், '2ஜி மகிழ்ச்சி, ஆர்.கே.நகரிலும் நீடிக்கும்' என்ற, பெரும் எதிர்பார்ப்பில், பிரதான எதிர்க்கட்சியான, தி.மு.க.,வினரும், தேர்தல் முடிவை எதிர்நோக்கி உள்ளனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 21ல் நடந்தது. அ.தி.மு.க., சார்பில், மதுசூதனன்; தி.மு.க., சார்பில், மருதுகணேஷ்; பா.ஜ., சார்பில், கரு.நாகராஜன்; சுயேச்சை, தினகரன் உட்பட, 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தொகுதியில், மொத்தம், 2.28 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களில், 83 ஆயிரத்து, 994 ஆண்கள்; 92 ஆயிரத்து, 867 பெண்கள்; 24 திருநங்கையர் என, மொத்தம், 1.76 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளித்து உள்ளனர். ஓட்டு எண்ணிக்கை, இன்று நடைபெற உள்ளது.சென்னை, ராணி மேரி கல்லுாரியில், காலை, 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்குகிறது. தபால் ஓட்டுக்கு, நான்கு ராணுவ வீரர்கள்

விண்ணப்பித்திருந்தனர். அவர்கள், தபால் ஓட்டுகளை அனுப்பி இருந்தால், முதலில், தபால் ஓட்டுகள் எண்ணப்படும்.

நிலவரம்

தபால் ஓட்டு இல்லையெனில், உடனடியாக, ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும். எனவே, காலை, 8:15 மணி முதல், முடிவுகள்வெளி வரத் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வாக்காளர்களுக்கு, பணத்தை வாரி இறைத்ததால், 'குக்கர்' விசிலடிக்கும் என, தினகரன் ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
ஆளுங்கட்சியினரும், வாக்காளர்களை கவனித்து உள்ளதால், 'இரட்டை இலை சாதிக்கும்' என, திடமாக நம்புகின்றனர்.

'அ.தி.மு.க., ஓட்டுகள் பிரிவதால், வெற்றி நம் பக்கம்' என்றும், '2ஜி மகிழ்ச்சி தொடரும்' என, தி.மு.க.,வினரும், ஆர்.கே.நகர் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். இவர்களில் வெற்றி பெறப் போவது யார் என்பது, இன்று தெரிந்து விடும்.

இதற்கிடையில், அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமலிருக்க, ஓட்டு எண்ணும் மையத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஓட்டு எண்ணும் பணியில், 100 ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கான பயிற்சி வகுப்பு, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

19 சுற்றுகள்:

பின், மாவட்டதேர்தல் அலுவலர், கார்த்திகேயன் கூறியதாவது:ஓட்டு எண்ணிக்கை, 14 மேஜைகளில் நடைபெறும். 18 முழு சுற்று, ஓர் அரை சுற்று என, 19 சுற்று களாக ஓட்டுகள் எண்ணப்படும். ஒவ்வொரு மேஜையிலும், மத்திய நுண் பார்வையாளர் இடம் பெறுவார். அதே போல், வருவாய் துறையைச் சேர்ந்த, 18 அலுவலர்கள், ஓட்டு எண்ணும் அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்கள் என, 100 பேர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாநகராட்சி அலுவலர்கள், ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபட மாட்டார்கள்.

ஓட்டு எண்ணும் பணி முழுவதும், 'வீடியோ'வில் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு சுற்றின் முடிவுகளும் உடனுக்குடன் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

700 போலீஸ் பாதுகாப்பு

ஓட்டு எண்ணிக்கை நடக்கும், சென்னை, ராணி மேரி கல்லுாரியை சுற்றியுள்ள பகுதிகளில், 700 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி, இன்று காலை, 8:00 மணி முதல் நடைபெறுகிறது. இதையொட்டி, ராணி மேரி கல்லுாரியை சுற்றியுள்ள பகுதிகளில், 500 போலீசார், மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், கல்லுாரியை சுற்றியுள்ள, ராதாகிருஷ்ணன் சாலை, காமராஜர் சாலைகளில், 200 போலீசார், கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024