இனிமை தருமா தனிமை?By கிருங்கை சேதுபதி | Published on : 29th December 2018 01:19 AM
முடியுமா முடியாதா என்பது ஒருபுறம் இருக்க, எது தனிமை? என்கிற கேள்வி எழுகிறது. இன்னொருவர் என்று எவருமிலா நிலையில் இருப்பது தனிமை. இது பெரும்பாலும் தனியறையில், ஓய்வறையில் கிடைப்பது. இது தனித்தனிமை. இன்னொன்று பொதுத்தனிமை.
ரயிலிலோ, பேருந்திலோ பயணித்துக் கொண்டிருக்கும்போது, யாருடனும் ஒட்டாமல் அந்நியப்பட்டிருக்கும் தனிமை. முன்னது இயற்கை, பின்னது செயற்கை. பணியிடங்களிலும் பொது இடங்களிலும் பலரது இல்லங்களிலும்கூட, இத்தகு தனிமை இப்போது அதிகரித்துக்கொண்டே போகிறது.
ஒரு காலத்தில் முதியோர்கள்தாம் பேச்சுத் துணைக்கு ஆட்கள் இன்றி இத்தகு அவஸ்தைக்கு உள்ளாவர். பொழுதுபோக்குக் கருவிகள் வந்த பிறகும்கூட, அவர்களை அந்தத் தனிமை விடாது வருத்தியது. ஆனால், தற்போது இத்தகு தனிமைக்குள் தாமே விரும்பி, இளைஞர்கள் பலரும் சிக்கியிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் இளம் பெண்களின் எண்ணிக்கைக் கூடுதல்.
இது ஒருவகையில் நோய் என்கிறார்கள். யாருடனும் கலந்து பழகவோ, பேசவோ, விருப்பமில்லாமல் போகிற மனநிலை இதனால் வாய்த்துவிடுகிறது. தொடக்கத்துத் தயக்கம் பின்னர் சுபாவமாக மாறி, இதனை இயல்பாக்கிவிடுகிறது. இதில் ஒருவித சுதந்திரவுணர்வும் சுகமும் இருப்பதுபோல் தோன்றினாலும், இதுவும் ஒருவித அடிமை மனோபாவம்தான். தன்னையுமறியாமல் ஆட்பட்டுப்போன ஆணோ, பெண்ணோ இணைந்து வாழத்தொடங்குகிற இல்லறத்தில் தடுமாறி, தடம் மாறிப்போகிறார்கள். பணியிடத்தில் இப்போக்கு ஏற்படுத்தும் விளைவோ இன்னும் விபரீதம். இதில் உறவோடு நட்பும் பலி கொள்ளப்படுகிறது; அது பழிவாங்கலுக்கு வித்திடுகிறது. இயல்பான மனித குணம் சிதைவுற்றுத் தேய்கிறது; வன்மம் தலைதூக்குகிறது.
இன்றைய உலகில், ஒருவரோடு பேசாமல், பழகாமல் வாழ்தல் இயலாத காரியம். தனிநிலையில் தன்னைத் தகவமைத்துக் கொள்வதற்கென்று வாய்த்ததே இந்த மனிதப்பிறவி. அதற்குப் பெற்றோரும் உற்றாரும் உதவி செய்யக் கூடியவர்கள். பிறப்பாலும், சூழலாலும் வருகிற பிழைபாடுகளைக் கண்டறிந்து களைகிறவர் ஆசிரியராகக் கொள்ளத்தக்கவர். அவர்கள் பத்திரிகையாசிரியராகவும், படைப்பாசிரியராகவும் இருக்கலாம்; குருநாதராகவும் இருக்கலாம். ஏன், அவர் கணவராகவும், காதலராகவும், நண்பராகவும், பெற்ற பிள்ளைகளாகவும் கூட இருக்கலாம்; ஆண்களுக்குச் சகோதரியாகவும், மனைவியாகவும், தோழியாகவும், இன்னபிற உறவினர்களாகவும் இருக்கலாம்; திருநாவுக்கரசருக்கு ஒரு திலகவதியார் போல, மணிவாசகருக்குக் குருந்தமரத்தடியில் கிடைத்த ஒரு குருநாதர்போல, பட்டினத்தாருக்கு அவர் வளர்த்த பிள்ளையைப் போல, காரைக்காலம்மையாருக்கு இறைவனே போல, யாருக்கும் யாரும் வாய்க்கலாம். இந்நிலை அறிவுரையாலும் கிட்டலாம்; அனுபவத்தாலும் வாய்க்கலாம்.
அறிவிலிருந்து அனுபவத்திற்கும், அனுபவத்தில் இருந்து அறிவுக்கும் கொண்டுசெலுத்தித் தன்னைத் தகவுடையவராய் உயர்த்திக்கொள்ள உதவும் ஒரு சந்தர்ப்பமே தனிமை. அது ஒரு நோயல்ல, தவம்; தவங்களைத் தன் வசமாக்கிக் கொள்ள இயற்கை கொடுத்த இனிய வரம்.
தனிமை என்று ஒன்றுமே இல்லை. துணையாய் யாரும் இல்லாத நிலையில், ஒருவருக்கு மனமே துணை; அதனைச் சரிவர பயன்கொள்ள முடியாதவர்களுக்கு, அதுவே பகை. வாழ்க்கைத் துணையாகவும், வழித்துணையாகவும், அறிவுத்துணையாகவும் சிலர் அமைந்துவிடுகிறபோது வாழ்க்கை சிறக்கிறது.
மனம் உடையவர்கள்தானே மனிதர்கள். அந்த மனதை தன் வசமாக்கிக் கொள்ளத் தெரிந்தவர்களுக்கு, தனிமை மாதிரி இனிமை தருகிற வேறொன்று இல்லவே இல்லை. அதனால்தான், தனிமை கண்டதுண்டு அதிலே சாரம் இருக்குதம்மா என்று மகாகவி பாரதியார் பாடினார்.
81 ஆண்டுகள் தனித்திருந்து வாழ்ந்த அப்பர் பெருமான், என்னில் ஆரும் எனக்கு இனியார் இல்லை என்கிறார். எத்தனையோ அல்லல்களைத் தன் வாழ்வில் அவரும் அனுபவித்தவர்தான். ஆனால், அவர் மனத்தொடு முறைப்பட வாழத்தொடங்கிய பிறகு, இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்று உறுதிப்பாட்டு நிலையை எய்துகிறார். இது எல்லாச் சமயப் பெரியோர்களுக்கும், சமுதாய வழிகாட்டிகளுக்கும் வாய்த்தது என்றால், நமக்கு மட்டும் வசப்படாமலா போகும்? துன்பத்தை இன்பமாக்கும் நுட்பத்தை இவர்களது வாழ்க்கை கற்றுத் தருகிறது.
இந்த வாழ்வில், இன்பத்தைப் பெறுகிற நல்வாயிலாக, இல்லறம் இருக்கிறது; பின்னர் அது நல்லறமும் ஆகிறது. தனித்திருந்து தவம் செய்கிற ஒருவரின் வாழ்வு துறவறம் ஆகிறது. அவருக்கு உற்ற துணையாய்ப் பரம்பொருள் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இல்லறத்திற்கும் துறவறத்திற்கும் இனிய துணையாக இருக்கிற பொதுப்பொருள், இப்பரம்பொருள். இது அவரவர்க்குரிய இறையாக, இறை நம்பிக்கையற்றோருக்கு இயற்கையாக இருந்து ஆற்றல் தருகிறது.
அதனால்தான், தனிமையில் இனிமை காண்போர், இயற்கை எழில் நிறைந்த இடத்திற்குப் போகிறார்கள். பலர் இறைவன் இருக்கும் திருக்கோயில்களுக்குச் செல்கிறார்கள். சிலர் ஏதுமற்ற அமைதி நிலையில் தியானம் புரிகிறார்கள். பலர் பொதுச்சேவையில் ஈடுபடுகிறார்கள். எதையோ, எப்படியோ அறப்பணியாய்ச் செய்கிறார்கள். தன்னிலை மறந்து தனிநிலை எய்தும் இத்தனிமைத் தவத்தின்வழி, சும்மா இருக்கக் கற்றவர்கள்தான் சுகமாய் இருக்கும் வழி அறிகிறார்கள். அப்போது அவர்களுக்குப் புரிகிறது, தனிமை என்பது தனிமை இல்லை என்பதும், அது வெளியில் இல்லை, உள்ளேதான் என்பதும்.
இப்போது தனிமை இனிமையாகி விடுகிறது. இந்தத் தனிமை, எல்லாருக்கும் மேலே இருக்கிற வானத்தை, அவரவர்க்குமான வானமாக்கிக் கொள்வதைப்போல, எங்கும் உலவி வருகிற காற்றில் இருந்து தனக்கான சுவாசத்திற்கு ஆக்சிஜனை எடுத்துக்கொள்வதுபோல, பொதுவெளியில் தனக்கான தனிவெளியை உருவாக்கிக்கொள்ள வழிவகுக்கிறது. பல நெருக்கடிகளில் இருந்து தப்பிக்கவும், தன்னைத்தானே தற்காத்துக் கொள்ளவும் வாய்ப்பளிக்கிறது. இதுதான் ஒவ்வொருவரது தனித்தன்மையையும் சிதையாமல் காப்பாற்றிக் கொள்ளவும் துணைபுரிகிறது.
அதனால்தான், ஒளவையார், இனிமையில் இனிமை தனிமை என்றும், இனிது இனிது ஏகாந்தம் இனிது என்றும், அதனினும் இனிது, ஆதியைத் தொழுதல் என்றும், அதனினும் இனிது, அறிவினரைச் சேர்வது என்றும் கூறிய அவர், அதனினும் இனிது, அறிவுள்ளாரைக் கனவிலும் நனவிலும் காண்பது என்று அவர் முடிக்கிற இடம்தான் மிகவும் இன்றியமையாதது.
அத்தகு அறிவுள்ளாரைக் கனவிலும் நனவிலும் காண்பதை விட்டுவிட்டு, கருதுவதை விட்டுவிட்டு, அறிவியல் கருவிகளுக்கு அடிமையாகிப் போனதுதான் தற்காலத் தலைமுறைக்கு நேர்ந்திருக்கிற நெருக்கடி.
இன்றைக்கு அந்த இடத்தைச் செல்லிடப்பேசி பிடித்திருக்கிறது. தனிமைக்குப் பயந்த காலம்போய் தனிமைக்குத் துணைதேடியவர்கள், தத்தம் கைப்பேசிகளுக்குள் முகம் புதைப்பதும் செவி சாய்ப்பதும் இப்போது பெரிதும் அதிகரித்து வருகிறது. கத்தி பிடித்தவன் கை சும்மா இருக்காது என்று கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு. அப்போது கத்தி; இப்போது கைப்பேசி. பல இடங்களில் பலரும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள், அருகில் இருக்கும் சகமனிதர்களுடன் அல்ல, எங்கோ இருப்பவர்களுடன். நேருக்குநேர் முகம் பார்த்துப் பேசுகிற சந்தர்ப்பம் வருகிறபோதும், செல்லிடப்பேசியில், முகநூலில் முகம் புதைத்துக்கொண்டு வார்த்தையாடுகிறவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.
முன்பெல்லாம் ரயிலிலோ, பேருந்திலோ, ஜன்னலோர இருக்கை கிடைத்துவிட்டால் ஏற்படுகிற ஆனந்தத்தைச் சொல்லி மாளாது. அது இல்லாவிட்டால் இதழ்களும், நூல்களும் இனிய துணையாகும். அதையும் கடந்து, அகநக நட்புக்குத் துணைசெய்யும் ரயில் சிநேகிதம், இப்போது சொந்த உறவுகளுடன் கூடப் பேசிப்பழக வாய்ப்பில்லாதபடிக்கு அத்தனையையும் வாரிச்சுருட்டி எடுத்துத் தனக்குள் வைத்துக் கொண்டிருக்கிறது செல்லிடப்பேசி. பெயருக்குத்தான் அவரவர்களின் கைகளில் அவை; உண்மையில் அவற்றின் கைகளில்தான் நாம் அனைவரும் இருக்கிறோம்; பல சமயங்களில் இருக்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல்.
அறிவியல் யுகத்தில் இது தவிர்க்கவியலாத வளர்ச்சி என்று கருதுவதில் பிழையில்லை.
ஆனால், அது அறிவையும் பொதுவுணர்வையும் அபகரித்துக் கொள்வதோடு, இனிமையாய்க் கழிக்க வேண்டிய தனிமைப் பொழுதைப் பல்வேறு வக்கிரமான எண்ணங்களுக்குள் ஆழ்த்தி, அக்கிரமச் செயல்கள் புரியத் தூண்டும் கிரியா ஊக்கியாகி விடுகிறதே? பழக்கத்தில் தொடங்கி, வழக்கத்திற்கு வந்து, இப்போது புதிய புதிய சிக்கல்களை உண்டுபண்ணி, வழக்குக்குக் கொண்டுபோய் நிறுத்தி வருகிறதே?
இதற்கெல்லாம் கவலைப்படாமல், இந்த வாழ்வை இன்பமாக்கிக்கொள்ள ஏது வழியென்று, தனிமையில் இருந்து சிந்திக்கலாம் என்று நினைத்தபோது, செல்லிடப்பேசி ஒலிக்கிறது...