Friday, February 16, 2018

தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தில் 26 இடங்களில் வருமான வரி சோதனை

Added : பிப் 16, 2018 01:23

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள, தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்திற்கு சொந்தமான, 26 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலுாரில் இயங்கும் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்திற்கு, திருச்சி மாவட்டம், சமயபுரம், காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில், கல்லுாரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த குழுமத்திற்கு சொந்தமான, பெரம்பலுாரில் உள்ள, 'சிட் பண்ட்ஸ்' நிறுவனம், நட்சத்திர ஓட்டல், மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை, பள்ளிகள், சீனிவாசனின் மூன்று 0மகள்களின் வீடுகள்.புதுநடுவலுார் கிராமத்தில் உள்ள சீனிவாசனின் பூர்வீக வீடு மற்றும் பெரம்பலுாரில் உள்ள சீனிவாசனின் வீடு என, 10 இடங்களில், வருமான வரித்துறையினர், நேற்று காலை, 8:00 மணி அளவில் சோதனையை துவங்கினர்.சென்னை, திருச்சி, திருநெல்வேலி, கரூர் உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த அதிகாரிகள், மேற்கண்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். பெரம்பலுாரில், திருச்சி மண்டல கூடுதல் இயக்குனர், யாசர் அராபத் தலைமையில் நடந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.இக்கல்வி குழுமங்களின் சார்பில், நடிகர் - நடிகையர் பங்கேற்கும், 'நட்சத்திரா' என்ற கலை விழா நடைபெற இருந்த நிலையில், இந்த சோதனை நடந்து வருகிறது. மேலும், திருச்சி - கரூர் பைபாஸ் சாலையில் உள்ள, சீனிவாசன் மகன், கதிரவன் மற்றும் சாலை ரோட்டில் உள்ள, சிட் பண்ட் நிறுவனத்திலும் சோதனை நடந்தது. அதில், கதிரவன் வீட்டில், ஏராளமான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

இது குறித்து, தமிழக வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது: பெரம்பலுார், சென்னை, மாமல்லபுரம், திருச்சி மற்றும் கர்நாடக மாநிலம், பிஜப்பூர் உட்பட, 26 இடங்களில் சோதனை நடக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, இக்கல்லுாரி நிர்வாகம், வங்கிகளில், 'டிபாசிட்' செய்தது தொடர்பாகவும், வேறு சில வரி ஏய்ப்பு வழக்குகள் தொடர்பாகவும், சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோதனை தொடர்வதால், வரி ஏய்ப்பு தொடர்பான விபரங்களை வெளியிட முடியாது. எனினும், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு தொடர்பாக, ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளன; அவற்றை ஆய்வு செய்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 30.10.2024