Friday, February 16, 2018

ஆபீஸ் வராத ஆர்.ஐ.,க்கு, 'அட்வைஸ்' : நொந்து போன வாலிபர், 'நெத்தியடி'---

Added : பிப் 16, 2018 01:10 




  திருப்பூர்: திருப்பூரில் அலுவலகத்துக்கு வராத அதிகாரியை கண்டித்து, நோட்டீஸ் போர்டில், இளைஞர் ஒருவர் அறிவுரை எழுதி வைத்து, பரபரப்பை ஏற்படுத்தினார்.திருப்பூர், ஆத்துபாளையம் காமாட்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர், மதன், 29; மளிகைக்கடை வைத்துள்ளார். இவர், வாரிசு சான்றிதழ் வேண்டி, வேலம்பாளையம் வருவாய் அலுவலகத்தில் விண்ணப்பிக்க சென்றார்.ஆனால், அலுவலகம் தொடர்ந்து பூட்டப்பட்டு இருந்தது. எட்டு நாட்கள் தொடர்ந்து அலுவலகம் சென்ற போதும், வருவாய் ஆய்வாளரை சந்திக்க முடியவில்லை.அவர் எங்கு சென்றுள்ளார்; எப்போது பார்க்கலாம் என்ற அறிவிப்பும் தகவல் பலகையில், இடம்பெறவில்லை.இதனால், அதிருப்தியும், மனஉளைச்சலும் அடைந்த மதன், அந்த தகவல் பலகையில், 'நில வருவாய் அதிகாரி அவர்களே, இன்றோடு, எட்டாவது நாளாக, உங்களை பார்க்க வந்தேன். நீங்கள் அலுவலகத்தில் இருப்பதில்லை. நீங்கள் வரும் நேரத்தை எழுதி வைத்தால், மக்கள் அலைக்கழிப்படுவது தவிர்க்கப்படுமே.'இப்படிக்கு, நீங்கள் வாங்கும் சம்பளத்தை, வரியாக அளிக்கும் இந்தியக்குடிமகன்' என்றும், அதன் கீழ், தனது பெயர், மொபைல் எண்ணையும் எழுதி சென்றார்.இது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையறிந்த, வருவாய் ஆய்வாளர் ராசு, உடனே அலுவலகம் சென்று, மதனுக்கு தேவையான சான்றிதழை கொடுத்தார்.மதன் கூறுகையில், “எப்போது பார்த்தாலும், ஆர்.ஐ., அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. அவர் எப்போது வருகிறார் என்பது தெரியாமல், மக்கள் நாள் கணக்கில் காத்திருந்து ஏமாற்றம் அடைகின்றனர். “இதனால், அப்படி எழுதி வைத்தேன். அரசு அதிகாரிகள் தங்களது கடமையை உணர்ந்து செயல்பட்டால், பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் வராது,” என்றார்.வருவாய் ஆய்வாளர் ராசு கூறுகையில், “அலுவலக பணி நிமித்தமாக, இரண்டு நாட்கள் சென்னைக்கு சென்றிருந்தேன். அடுத்த இரண்டு நாட்கள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சிக்காக சென்று விட்டேன். அதனால் வர முடியவில்லை. மற்ற நேரங்களில், அலுவலகத்துக்கு தினமும் வருகிறேன்,” என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.10.2024