Friday, February 16, 2018

பெற்றோரை கவனிக்காத மகன்கள் : அபராதம் விதிக்க ம.பி.,யில் முடிவு

Added : பிப் 16, 2018 00:58

ஷியோப்பூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் வசிக்கும் பழங்குடியின சமூகத்தில், பெற்றோரை கவனித்துக் கொள்ளாத மகன்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆலோசனை : மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், மொரினா, ஷியோப்பூர், பிண்ட், குவாலியர், விதிஷா மற்றும் குணா மாவட்டங்களிலும், ராஜஸ்தான் மாநிலம் பாரன் மாவட்டத்திலும், சஹரியா பழங்குடியினர் வசிக்கின்றனர். இந்த சமூகத்தினரின் கூட்டமைப்பு, சமீபத்தில் ஆலோசனை நடத்தி, சில முக்கிய முடிவுகளை எடுத்தது. அந்த விபரம்: பெற்றோரை கவனிக்காத, செலவுக்கு பணம் தராத மகன்களுக்கு, முதல் முறைக்கு, 500 ரூபாய், இரண்டாவது முறை, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதற்கு பின்னும் பெற்றோரை புறக்கணிக்கும் மகன்கள், சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்படுவர்.

அபராதம் : அதே போல், 10 நாட்களுக்கு மேல், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு, 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மொபைல் போனில் பேசும் பெண்கள், வேறு ஜாதியில் திருமணம் செய்த பெண்கள், சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்படுவர்.திருமணம் போன்ற விழாக்களில், ஒலிபெருக்கியை பயன்படுத்துவதால், இளைஞர்கள் மது அருந்திவிட்டு நடனமாடுவதுடன், பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர். எனவே, ஒலிபெருக்கி பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறும் குடும்பத்தினர், சமூகத்தில் இருந்து விலக்கப்படுவர். இவ்வாறு அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.10.2024