விடுதி உணவு சாப்பிட்ட நர்ஸிங் மாணவிகள் மயக்கம்..! திருப்பூரில் பரபரப்பு
திருப்பூர் அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதியில், இரவு உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள நஞ்சியம்பாளையம் பகுதியில் செயல்பட்டுவருகிறது, மகாராணி நர்சிங் கல்லூரி. இங்கு, 300-க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். சிலர், இக்கல்லூரிக்குச் சொந்தமான விடுதியில் தங்கிப் பயில்கின்றனர்.
இந்நிலையில், நேற்றைக்கு முந்தைய நாள் இரவு, கல்லூரி விடுதியில் பரிமாறப்பட்ட உணவை சாப்பிட்ட சில மாணவிகளுக்கு இன்று அதிகாலை தொடர் வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டிருக்கிறது. இன்று காலை ஓர் ஆசிரியர், பாதிக்கப்பட்ட 9 மாணவிகளையும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தார். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், உணவு ஒவ்வாமை ஏற்பட்ட காரணத்தால்தான் மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் அதற்குண்டான சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
மயக்கமடைந்த கல்லூரி மாணவிகளை அழைத்து வந்ததால், அரசு மருத்துவமனை வளாகம் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது. ஆனால், கல்லூரியின் பெயர் போய்விடும் என்பதால் ஆசிரியர்கள் உடனே மாணவர்களை சிகிச்சை எடுக்க அனுமதிக்காமல் அழைத்துச் செல்ல முயன்றனர். சந்தேகமடைந்த அரசு மருத்துவமனை செவிலியர்கள், காவல்துறைக்கு தகவல் அளித்ததையடுத்து போலீஸார் மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கவைத்து அழைத்துச்செல்ல வலியுறுத்தியுள்ளனர் .
இதையடுத்து மாணவிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கல்லூரி விடுதியின் உணவு சரியில்லை என்று மாணவர்கள் குறை கூறிவிடக்கூடாது என்பதற்காக அவசர அவசரமாக அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது .
No comments:
Post a Comment