Friday, October 5, 2018

குணப்படுத்த முடியாத நோயாக இருந்தாலும் சிறுவனை கருணை கொலை செய்ய வாய்ப்பு இல்லை

2018-10-05@ 05:48:45




* மருத்துவக் குழு அறிக்கை தாக்கல் 

* நீதிபதி கண்கலங்கியதால் நீதிமன்றத்தில் சோகம்

சென்னை: தன்னுடைய உணர்ச்சியில்லாத 10 வயது மகனை கருணைக் கொலை செய்யக்கோரிய வழக்கில் சிறுவனைக் கருணைக்கொலை செய்ய முடியாது என்று மருத்துவக் குழு அறிக்கையைப் பார்த்த உயர் நீதிமன்ற நீதிபதி கண்கலங்கியது நீதிமன்றத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை உயர் நீதிமன்றத்தில் கடலூரைச் சேர்ந்த திருமேனி என்பவர், தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நான் டெய்லர் வேலை செய்கிறேன். எனக்கு 14 வயது, 12 வயதில் 2 பெண் குழந்தைகளும் 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். எனது மகன் கடந்த 2008ல் பிறந்தான். அவன் பிறந்ததிலிருந்து பேசவில்லை. சுற்றியிருப்பவர்களையும் அடையாளம் காண முடியவில்லை.

தற்போது அவனுக்கு தினமும் 20 முறை வலிப்பு வருகிறது. அவனைக் குணமாக்க முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, எனது மகனைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுவனை அரசினர் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் பரிசோதனை நடத்த சிறப்பு மருத்துவர்களை தேர்வு செய்ய குழு அமைத்து உத்தரவிட்டார். அதன்படி மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. இந்த மருத்துவக் குழு சிறுவனைச் சோதனை செய்து நேற்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், பாதிக்கப்பட்டுள்ள சிறுவன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நிலையில் உள்ளான். தாய் மற்றும் சகோதரி பேசுவது அவனுக்கு கேட்கிறது.

முழுநேரம் அவனுக்கு மற்றவர்கள் உதவி தேவைப்படுகிறது. எனவே, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின் அடிப்படையில் சிறுவனை கருணைக் கொலை செய்ய முடியாது. இறுதி வரை எந்த மருத்துவத்தாலும் குணப்படுத்த முடியாத நிலை உள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இதைக்கேட்ட நீதிபதி, கண்கலங்கினார். அப்போது, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயனிடம், இந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க அதிக செலவாகுமே. ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டார். அதற்கு கார்த்திகேயன் எத்தனை கோடி ரூபாய் வேண்டுமானாலும் பெற முடியும். ஆனால், சிறுவனை சாதாரண நிலைக்கு கொண்டுவர முடியாது என்ற நிலையே உள்ளது என்றார். இதைக்கேட்ட நீதிபதி மீண்டும் கண்கலங்கினார். இதைப்பார்த்த நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த வக்கீல்களும் கண்கலங்கினர்.

அப்போது, அரக்கோணத்தில் உள்ள பிரேம் நிகேதன் என்ற ஆஸ்ரமம் அந்த சிறுவனை பார்த்துக்கொள்வதாக தெரிவித்தது. ஆனால், சிறுவனின் தந்தை என் குழந்தையை நானே பார்த்துக்கொள்வேன் என்று கூறி அழுதார். இதையடுத்து, நீதிபதி, இதுபோன்ற மருத்துவ சிகிச்சையால் குணப்படுத்த முடியாத மிகவும் கஷ்டமான நிலையில் உள்ளவர்களின் பெற்றோருக்கு உதவி செய்யும் வகையில் திட்டம் எதுவும் மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்துள்ளதா?. அப்படி ஒரு திட்டம் இல்லையென்றால் இதற்காக ஒரு புதிய திட்டத்தை ஏன் கொண்டுவரக்கூடாது? என்று கேள்வி எழுப்பி அடுத்த கட்ட விசாரணையை வரும் 23ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024